மலைக்கோவிலுக்காகப் போராடும் கிராமம் - ‘மகாசேனா’

3 mins read
64e07835-a658-40c5-9e5e-2447c883a242
சிருஷ்டி டாங்கே. - படம்: ஊடகம்
multi-img1 of 2

தமிழ்த் திரையுலகின் ‘காந்தாரா’ என்ற எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது ‘மகாசேனா’.

வனப் பகுதியில் நடக்கும் ஆக்‌ஷன் கலந்த திகில் கதை. 80% காட்சிகள் காட்டுப் பகுதியில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விமல். அவரது ஜோடி சிருஷ்டி டாங்கே. தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் உருவாகிறது.

“குரங்கணி என்ற மலைக்கிராமத்தில் உள்ள கோவிலை வைத்து சில திகில் கதைகள் பரவுகின்றன. இதனால் அப்பகுதி மக்களிடம் ஒருவித அச்ச உணர்வு பரவுகிறது. அந்தக் கோவிலின் சிறப்பு அங்குள்ள சக்திவாய்ந்த சிலை.

“சாதாரணமாக யார் கண்ணுக்கும் புலப்படாத அந்தச் சிலை, குறிப்பிட்ட ஒருநாள் மட்டும்தான் தெரியும். கடவுள் தங்களுடன் இருப்பதாக அந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள். மேலும், அந்நாளில் திருவிழாவும் நடத்திக் கொண்டாடுகிறார்கள்.

“இந்நிலையில், மலைக் கிராமத்துக்கு மலையேற்றத்துக்காக வந்து சேரும் கல்லூரி மாணவர் குழுவைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள சிலையை அறிவியலாக நம்புகிறார்கள்.

“அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேற்று கிரகத்தில் இருந்து வந்த கல் என்றும் நம்புகிறார்கள்.

“மலைக்கோவில் சிலையைக் கடத்த ஒரு கும்பல் திட்டமிட, கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து போராடி, கோவிலைக் காப்பாற்றுகிறார்கள். கடவுள் மக்களைக் காப்பாற்றுகிறாரா என்பதுதான் கதை,” என்கிறார் இயக்குநர் தினேஷ்.

கூடலூர் மலைப்பகுதியில்தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கரடி, யானை என விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் படப்பிடிப்பை நடத்தினார்களாம். 200 பேர் கொண்ட படக்குழு நாள்தோறும் காட்டுக்குள் சென்று பாதுகாப்பாக திரும்புவது சவாலாக இருந்தது என்று அண்மைய ஊடகப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் தினேஷ்.

நாயகன் விமல் ஏற்கெனவே கிராமப்புறம் சார்ந்த பல படங்களில் நடித்துள்ளார். எனினும், இதுவரை யானையுடன் சேர்ந்து நடித்ததில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள தினேஷ், அடர்த்தியான தலைமுடி, தாடி, மீசை என முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

கதைப்படி, ‘பொம்மி’ என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார் சிருஷ்டி டாங்கே. சில நடிகைகள் கதையைக் கேட்டதும், ‘விமலுக்கு ஜோடியாக நடிக்க தயார். பதின்ம வயதுப் பிள்ளைக்கு அம்மா வேடம் என்றால் அது வேண்டாம்’ என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டார்களாம்.

“சிருஷ்டி டாங்கேவுக்கும் தொடக்கத்தில் சிறு தயக்கம் இருந்தது. எனினும், நாயகி கதாபாத்திரத்தின் தன்மை, தோற்றம் ஆகியவற்றை விவரித்து ஏற்கெனவே நாங்கள் எடுத்து வைத்திருந்த காணொளியைப் பார்த்ததும் ஒப்புக்கொண்டுவிட்டார்.

“படத்தில் அவருக்கு சில சண்டைக் காட்சிகளும் உள்ளன. அடிபடக்கூடும் எனத் தெரிந்தும் துணிச்சலுடன் நடித்த அவரைப் பாராட்ட வேண்டும்,” என்கிறார் தினேஷ்.

யோகி பாபுக்கு கதையுடன் கலந்த கதாபாத்திரம். ஜான் விஜய்க்கு வன அதிகாரி வேடம். மகிமா குப்தா என்கிற மராட்டிய நடிகை பழங்குடி மக்கள் குழுவின் தலைவியாக வருகிறார்.

அருணகிரி, பிரவீன் குமார் இசையமைக்க, உதய பிரகாஷ் பின்னணி இசையமைத்துள்ளார்.

“இது குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இருக்கும். இந்தக் கதை உருவானதுமே விமல்தான் கதாநாயகனாக நடிக்க பொருத்தமானவர் என முடிவு செய்துவிட்டோம்.

“‘காந்தாரா’ மிகப் பெரிய வெற்றி பெற்ற படம். அதனுடன் என் படத்தை ஒப்பிட முடியாது. என்றாலும் உள்ளடகத்தைப் பொறுத்தவரை ஒற்றுமை இருப்பதாகக் கருதலாம்,” என்கிறார் இயக்குநர் தினேஷ்.

குறிப்புச் சொற்கள்