இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகிறது ‘பரமசிவன் பாத்திமா’. இவர் ஏற்கெனவே ‘தமிழ்க் குடிமகன்’ என்ற படத்தை இயக்கியவர்.
மனிதர்களைப் பிரிக்கும் சாதிக் கட்டமைப்பை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் தாம் இப்படத்தை உருவாக்கியதாக சொல்லும் இசக்கி கார்வண்ணன் இதுவரை ஏழு படங்களை இயக்கியுள்ளார்.
எனினும், குற்றச்செயல்கள், திகில் பின்னணியில் அவர் உருவாக்கும் முதல் படம் ‘பரமசிவன் பாத்திமா’.
“வெறும் திகில் படைப்பாக மட்டுமல்லாமல் மக்களின் அறியாமையை போக்கும் விதமாகவும் இந்தப் படம் அமைந்திருக்கும். நடிகர் விமலும் ‘கன்னிமாடம்’ பட நாயகி சாயா தேவியும் இணைந்து நடித்துள்ளனர்.
எம்.எஸ்.பாஸ்கர், ‘கூல்’ சுரேஷ் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மைனா’ சுகுமார் வில்லனாக மிரட்டியுள்ளார். இசக்கி கார்வண்ணனும் புலனாய்வு அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
ஒரு மலைக் கிராமத்தில் திருமணம் நடந்து முடிந்த கையோடு மணமகனைக் கொன்று விடுவது வழக்கமாக இருக்கிறது. இதற்கான பின்னணி பிடிபடாமல் காவல்துறை தவிப்புக்கு ஆளாகிறது.
அந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள மற்ற கிராமங்களைச் சேர்ந்தவர்களும் பீதியடைகின்றனர். ஏன் இந்தப் படுகொலைகள் நடக்கின்றன என்பதைத் திகிலுடன் கூடிய திரைக்கதை விவரிக்குமாம்.
“இந்தக் கதைக்கு விமல்தான் பொருத்தமான நாயகனாக இருப்பார் என்று தொடக்கத்திலேயே எனக்குத் தோன்றிவிட்டது. தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி பெற்ற கிராமத்து படங்களில் ‘களவாணி’யும் ஒன்று. அதில் விமலின் நடிப்பு யாராலும் மறக்க முடியாதது.
தொடர்புடைய செய்திகள்
“எனது படத்திற்கு அவர் கதைக்குள் இறங்கி பணியாற்றிய விதம் வியப்பளித்தது. ஒரு நொடியில் 24 பொய்களை சொல்லும் சினிமாவில் எதார்த்தத்தை காட்டும்போது அது உண்மையாகிறது.
“அந்த வகையில், உயிரோட்டமுள்ள இந்தக் கதைக்குள் நுழையும் ரசிகர்கள் புதியதோர் உணர்வைப் பெற முடியும். எனவே எதார்த்தமாக நடிக்கும் விமல் இந்தப் படத்துக்கு பொருத்தமான நாயகனாக அமைந்ததில் வியப்பில்லை,” என்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.
‘வீராயி மக்கள்’, ‘குப்பைக் கதை’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த தீபன் சக்கரவர்த்திதான் ‘பரமசிவன் பாத்திமா’ படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
ஒரு நல்ல திரைப்படத்துக்கு திரைக்கதைதான் அச்சாணி என்பதை நன்கு புரிந்து கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால் இந்தப்படம் வெற்றி பெறுவது உறுதி என நம்புவதாகச் சொல்கிறார் இசக்கி கார்வண்ணன்.