வில்லன் வேடத்தில் மூத்த நடிகர்

2 mins read
98d3b884-ff27-4327-8963-d1ae8b0f2fa7
‘தி பாரடைஸ்’ படத்தில் நானி. - படம்: ஊடகம்

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தில் பழம்பெரும் நடிகர் மோகன் பாபு வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.

தற்போது இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் ‘ஹிட் 3’ படத்தில் நானி நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, ‘தசரா’ படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் ‘தி பாரடைஸ்’ படத்திலும் நடித்து வருகிறார்.

எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமான பொருள்செலவில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் சுவரொட்டிகள் வெளியாகி பரவின.

இந்நிலையில், ‘தி பாரடைஸ்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பழம்பெரும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் நானியின் ‘வால்போஸ்டர் சினிமா’ தயாரிப்பில் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது ‘கோர்ட் - ஸ்டேட் வெர்சஸ் நோபடி’.

ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரியதர்ஷினி, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி, சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இரண்டே நாள்களில் உலகளவில் ரூ.15.90 கோடி வசூலைக் குவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற இப்படவிழாவில் தெலுங்கு நடிகர் சிவாஜி பேசுகையில், “என்னுடைய சிறுவயதில், சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவை ‘டேரிங் அண்ட் டேஷிங்’ என்றுதான் அழைப்பார்கள். இன்றைய தலைமுறையின் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா என்று நானியைத்தான் சொல்வேன்.

“நானி ஒரு பெரிய நட்சத்திரமாக இருப்பதால் ‘கோர்ட்’ போன்ற சிறிய படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், திறமைவாய்ந்த நடிகர், நடிகைகளை ஊக்குவிப்பதற்காகவும் நல்ல கதைகளை வெளியில் கொண்டு வருவதற்காகவும் ‘வால்போஸ்டர் சினிமா’வை நானி தொடங்கி இருக்கிறார்’ என்றார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்