தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வர்மா என்ற கதாபாத்திரத்தில் அதிர வைக்கும் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகர் விநாயகன்.
மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் இவர் ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையே உருவாக்கியுள்ளார். ஆனாலும் சினிமாவில் தனக்கு இவ்வளவு செல்வாக்கு, ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கிறது என்பதை உணராமல் பொது வெளியில் எப்போதும் சர்ச்சையில் மாட்டிக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு சர்ச்சையில் அவர் சிக்குவது வழக்கமாகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் அண்மையில் தனது வீட்டின் பால்கனியில் நின்று எதிர் வீட்டுக்காரர் ஒருவரை அநாகரிக வார்த்தைகளால் வசை பாடியதுடன், தான் அணிந்திருந்த வேட்டியையும் அவிழ்த்து காட்டி அநாகரிகமாக நடந்திருக்கிறார்.
இதுபற்றி யாரும் புகார் அளிக்கவில்லை. இருந்தாலும் வலைத்தளங்களில் இந்த காணொளி வெளியாகி ரசிகர்களுளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல ரசிகர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தாலும் அதிக அளவிலான ரசிகர்கள் விநாயகன் தனது இந்தப் போக்கை மாற்றிக் கொண்டு திரையுலக பயணத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அக்கறை காட்டி கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தான் செய்த செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுள்ளார் விநாயகன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு சினிமா நடிகராகவும் ஒரு மனிதராகவும் எனக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் என்னால் சமாளிக்க முடியவில்லை. என் பக்கம் இருந்து எதிர்மறையாக வெளிப்பட்ட தவறான விஷயங்களுக்காக பொதுமக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

