தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘விண்வெளி நாயகா’ பாடல் கூட்டுமுயற்சியால் உருவானது: ஷ்ருதி ஹாசன்

1 mins read
2b0213f7-0a65-41d1-9317-71eb91bf6b37
ஷ்ருதி ஹாசன். - படம்: ஊடகம்

‘தக் லைஃப்’ படம் குறித்து பலரும் பலவாறு விமர்சித்திருந்தாலும், அப்படத்தின் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்திருப்பது மட்டும் உண்மையிலும் உண்மை.

‘முத்த மழை’, ‘விண்வெளி நாயகா’, ‘அஞ்சு வண்ணப் பூவே’ ஆகிய மூன்று பாடல்ளை முணுமுணுக்காத இசை ரசிகர்கள் இல்லை எனலாம்.

இதில் ‘விண்வெளி நாயகா’ பாடலை ஷ்ருதி ஹாசன் பாடியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இப்பாடலைப் பாடி, தந்தை கமல் ஹாசனைப் பெருமைப்படும்படி செய்தார்.

இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில், நீண்ட காலமாக தாம் பாடியிருந்தாலும், இக்குறிப்பிட்ட பாடலுக்காகப் பெற்ற வரவேற்பை இதுவரை பெற்றதில்லை என்று தெரிவித்துள்ளார் ஷ்ருதி.

“என்னை விரும்பாதவர்கள்கூட என்னைத் தொடர்புகொண்டு இந்தப் பாடலைப் பற்றிப் பேசுகிறார்கள். எத்தனை மகள்களால் தங்கள் தந்தைக்காக இப்படிப் பாட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

“எனக்கு இது நெகிழ்ச்சி மிக்க தருணம். பல மாதங்களுக்கு முன்பு இந்தப் பாடல் குறித்து என்னிடம் கூறினார்கள்,” என்று ஷ்ருதி குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானுடன் மற்றொரு படத்திற்காகப் பாடிக்கொண்டிருந்த போதுதான், ‘விண்வெளி நாயகா’ பாடலைப் பற்றி குறிப்பிட்டு, “பாட விரும்புகிறீர்களா?” என ஷ்ருதியிடம் அவர் கேட்டாராம்.

“வெளியில் தெரியாத பலரின் கூட்டுமுயற்சியால் உருவானது ‘விண்வெளி நாயகா’ பாடல். ரகுமானுடன் பணிபுரியும்போது, அவர் என் குடும்பத்தினரைப் போன்றவர் என்ற உணர்வு கிடைக்கிறது,” என்று பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார் ஷ்ருதி.

குறிப்புச் சொற்கள்