திரையுலகில் விவாகரத்து அதிகரித்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
‘யோகி டா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் இத்தகவலை அறிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக விஷால் தெரிவித்தபோது, அதே விழா மேடையில் அமர்ந்திருந்த தன்ஷிகாவும் அதை ஆமோதித்தார். ஆகஸ்ட் 29 விஷாலின் பிறந்த நாளாகும்.
சாய் தன்ஷிகா பேசுகையில், இது தங்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள் என்றும் கடந்த இருபது ஆண்டுகளாக இதற்காகத்தான் காத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
“இன்று காலையில்கூட ஒரு செய்தி வெளியானது. ஆனால், அதைப் பார்த்த பிறகும்கூட 15 ஆண்டுகளாக நாம் நண்பர்கள். இனியும் அப்படியே இருந்துவிடுவோம் என்றே நினைத்தோம். 15 ஆண்டுகளாக நண்பர்களாக, உறவினர்களாக இருந்தோம். இப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்,” என்றார் தன்ஷிகா.
இவரைத் தொடர்ந்து தனக்கே உரிய உற்சாகத்துடன் பேசினார் விஷால். தன்னையும் தன்ஷிகாவையும் இணைத்து பல்வேறு கிசுகிசுக்கள் பரவி வருவதாகக் குறிப்பிட்டார்.
“இதற்கு மேல் கிசுகிசுக்கள் வேண்டாம். நாங்கள் இருவரும் கண்டிப்பாக வடிவேலு, கோவை சரளா அம்மா மாதிரி இருக்கமாட்டோம்.
எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் உள்ளது. தன்ஷிகாவின் தந்தை இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அவரது ஆசிர்வாதத்துடன் இங்கே அறிவிக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“நான் தன்ஷிகாவைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன்,” என்றார் விஷால்.
அண்மையில் இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. மதுப்பழக்கம்தான் இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
ஆனால் விஷால் தரப்பில் இதை மறுத்தனர். அவர் மதுப்பழக்கத்தைக் கைவிட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.
விஷால் நடிப்பில் இந்தாண்டு தொடக்கத்தில் ‘மத கஜ ராஜா’ திரைப்படம் வெளியீடானது.
அதன் பிறகு அவர் சிலபல படங்களில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாயின. ஆனால் அத்திரைப்படங்கள் தொடர்பான அடுத்தகட்ட பணிகள் தொடங்கவில்லை.
இந்நிலையில் அண்மைய ஒரு பேட்டியில்கூட நான்கு மாதங்களில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக அறிவித்திருந்தார் விஷால்.
முன்பு, நடிகர் சங்க கட்டடத்தின் வேலை முடிந்த பிறகுதான் தனக்கு திருமணம் எனக் கூறியிருந்தார் விஷால். தற்போது நடிகர் சங்கத்தின் கட்டடப் பணிகளும் முடியும் நிலையில் உள்ளன.