விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் மேடையில் நின்ற நடிகர் விஷால் மயங்கி விழுந்தார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால்.
‘செல்லமே’ படத்தில் ஆரம்பித்து ‘மத கஜ ராஜா’ வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
இவ்விழாவில் பல ஊர்களைச் சேர்ந்த திருநங்கைகளும் கலந்துகொண்டு சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இதில், தாலி கட்டுதல், திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிகளும் இடம்பெறும்.
இந்த அழகிப் போட்டியில் தமிழ்நாடு மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த திருநங்கைகளும் கலந்துகொள்வார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விஷால், போட்டியாளர்களைப் பற்றிச் சிறப்பாகப் பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கியபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.
இந்தச் சூழலில், திமுக முன்னாள் அமைச்சரான பொன்முடி விஷாலை தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக அதிகாரபூர்வ தகவல் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
விஷாலுக்கு ஏற்பட்ட மயக்கத்துக்கான காரணம்குறித்து தெரியவில்லை. ஆனால், கோடைவெயிலின் தாக்கம் காரணமாகவும், போதுமான காற்றோட்ட வசதி இல்லாத நிலையிலும் கூட விஷாலுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னதாக ‘மத கஜ ராஜா’ படம் வெளியாவதற்கு முன்னதாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின்போதும்கூட விஷால் கை நடுங்கியபடி பேசினார். மேலும், உடல் மெலிந்து காணப்பட்டார். அதோடு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.