தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரசிகர்களின் கைத்தட்டலுக்கும் விசிலுக்கும் காத்திருந்தேன்: தினேஷ்

3 mins read
c2108202-f481-4dd8-8cc7-403fd8a6e74a
‘லப்பர் பந்து’ படத்தில் நடித்திருந்த ஹரிஷ் கல்யாண், தினேஷ். - படம்: ஊடகம்

ரசிகர்களின் கைத்தட்டலுக்கும் அவர்கள் அடிக்கும் விசில் சத்தத்திற்கும் ஏங்கிக்கொண்டு இருந்தேன். அது ‘லப்பர் பந்து’ படம் மூலம் கிடைத்துவிட்டது என்று கூறுகிறார் அட்டகத்தி தினேஷ்.

தமிழில் இதுவரை ஏராளமான விளையாட்டை மையப்படுத்திய படங்கள் வந்துள்ளன. அதில் சில படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன.

விளையாட்டுடன் சரியான விகிதத்தில் உணர்வுகள் கலந்து நல்ல திரைக்கதையுடன் வரும் படங்கள் எப்போதும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அப்படியான படங்களில் ஒன்றாக வெளியாகியுள்ள படம்தான் ‘லப்பர் பந்து’.

ரப்பர் பந்துகள் 15ரூபாய்க்கு விற்பனையான ஒரு காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்ட சிறுவனாக இருக்கும் அன்பு (ஹரிஷ் கல்யாண்) பள்ளியிலிருந்து வகுப்பைப் புறக்கணித்துவிட்டு கிரிக்கெட் ஆட செல்கிறார்.

எதிரணியில் சச்சின் போல அந்த ஏரியாவின் மிகப் பெரிய விளையாட்டு வீரராக திமிருடன் (கெத்துடன்) இருக்கும் கெத்து பூமாலை (அட்டகத்தி தினேஷ்) பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறார்.

பேட்டிங்கில் அவருடைய பலவீனத்தை சரியாக அன்பு கணித்தாலும் அவருக்கு பவுலிங் வாய்ப்பு கிடைக்காமல் போகவே அங்கிருந்து விரக்தியுடன் கிளம்பிச் செல்கிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ரப்பர் பந்து 35ரூபாய்க்கு விற்கப்படும் தற்போதைய காலகட்டத்தில் இளைஞனாக இருக்கும் அன்பு, யாரென்று தெரியாமலேயே கெத்து பூமாலையின் மகளை காதலிக்கிறார்.

ஒரு போட்டியில் தற்செயலாக கெத்து பூமாலை - அன்பு இருவரும் மோதும்போது இருவருக்குள்ளும் ஈகோ பிரச்சினை வெடிக்கிறது.

இந்த ஈகோ பிரச்சினை இருவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சிக்கல்களைக் கொண்டு வருகிறது. இருவரும் அந்த சிக்கல்களிலிருந்து மீண்டது எப்படி என்பதை விறுவிறுப்பாகவும், நெகிழ்ச்சியான தருணங்களுடனும் சொல்கிறது ‘லப்பர் பந்து’.

“ஒரு வாழ்க்கையை, அதன் உண்மைத்தன்மையோட கொண்டுவந்து காட்ட முயற்சி எடுக்கிறார்கள். இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு என்ன வேண்டுமோ, அதைக் கொடுத்து இருக்கிறேன்,” என்றார் படத்தில் கெத்து பூமாலையாக நடித்திருக்கும் அட்டக்கத்தி தினேஷ்.

“இது எனக்கான நேரம் மாதிரி அமைந்துவிட்டது. ‘லப்பர் பந்து’ நிச்சயம் வெற்றி பெறும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். இந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

“மக்கள் இப்போதெல்லாம் ஏதாவது புதிதாக எதிர்பார்க்கிறார்கள். ஊர் ஊராக திரையரங்குகளுக்குச் சென்று மக்களை சந்தித்துவிட்டு வந்தேன். ரசிகர்களின் அன்புக்கு எதுவும் ஈடாகாது,’’ என்று மெல்லிய குரலில் மகிழ்ச்சியுடன் பேசினார் ‘அட்டகத்தி’ தினேஷ். இப்போது ‘கெத்து’ தினேஷாக உருமாறியிருக்கிறார்.

“கெத்து’ தினேஷுக்குக் கிடைக்கிற வரவேற்பு வேற மாதிரி இருக்கிறதே என்று கேட்டதற்கு, “இந்த மாதிரி பாராட்டுகளுக்கும், விசில் சத்தத்துக்கும் நான் ஏங்கியிருந்திருக்கேன். இன்னமும் அதுக்காகத்தான் நான் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

“நாம் திரையில் செய்யும் வேலைக்குப் பணம் கிடைக்கிறது. ஆனால், அதைத் தாண்டி நாம் செய்யும் வேலைக்கு ஒரு திருப்தியான பலன் கிடைக்கிறது என்றால் அந்தப் பாராட்டும் அங்கீகாரமும்தான்.

“நான் ஒரு படத்தை முடித்துவிட்டுத்தான் அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வேன். ஒரு கதையைக் கேட்டவுடன் கதைக்குள் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதே என்னுடைய முதல் கேள்வியாக இருக்கும்.

“கதை நன்றாக இருக்கிறதா? என்னால் அந்தக் கதையில் ஒன்றிப்போய் ஏதாவது செய்ய முடியுமா என்று கவனிப்பேன். இமேஜ் எல்லாம் இதில் நான் பார்ப்பது இல்லை. எது எனக்கு சரியாக வரும் என்று தோன்றுகிறதோ அதை ஒத்துக்கொள்வேன்.

‘கெத்து’ தினேஷா என்னை இப்போது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ‘இதில் இருந்து இனி இறங்கக் கூடாது. உங்க நடிப்பு அபாரம்’ என்று கை வலிக்கும் அளவுக்கு என் கையைப் பிடித்துக் குலுக்கிச் சொன்ன மக்களையும் திரையரங்கைவிட்டு வெளியே வந்தால் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் என்னை விரட்டி வந்து வாழ்த்துச் சொல்லும் கள்ளம் கபடமற்ற ரசிகர்களையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

“அவர்களுக்காக நான் இதில் இருந்து இறங்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன்,” என்று கெத்துடன் கூறினார் அட்டக்கத்திப் போய் கெத்துவாக மாறியிருக்கும் தினேஷ்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்