சத்யன் மகாலிங்கம்
- கடந்த இரு வாரங்களாக சமூக ஊடகங்களில் இந்தப் பெயர்தான் அதிகம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இளையர்கள் வட்டாரங்களில் அதிகம் முணுமுணுக்கப்படும் பெயரும் இதுவே.
யார் இவர் என்று கேட்பவர்களுக்காக ஓர் அறிமுகம்.
சத்யன் நல்ல பாடகர். தமிழில் ‘கலக்கப்போவது யாரு’, ‘தோஸ்து படா தோஸ்து’, ‘பாஸு பாஸு பாஸு’, ‘கனவிலே கனவிலே’, ‘அட காவக்கார கிளியே’, ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ எனப் பல வெற்றிப் பாடல்களைப் பாடியிருப்பவர்.
இவர் 26 ஆண்டுகளுக்கு முன்பு மேடைக் கச்சேரியில் பாடிய (திரையில் ‘காதலர் தினம்’ படத்துக்காக உன்னிகிருஷ்ணன் பாடியது) ‘ரோஜா ரோஜா’ பாடல் திடீரென சமூக ஊடகங்களில் ‘டிரெண்டிங்’ பட்டியலில் இடம்பெற, பிறகென்ன... திரும்பிய திசையெல்லாம் இந்தப் பாடல்தான் கேட்கக் கிடைக்கிறது.
மேடைப் பாடகராக மட்டுமே வலம் வந்தபோது சத்யன் பாடிய பல திரைப்பாடல்களில் ‘ரோஜா ரோஜா’ பாடலும் ஒன்று.
“உண்மைதான். சமூக ஊடகங்களில் அந்தக் காணொளியைப் பார்த்த பலரும், யார் இந்தப் பையன்? என என்னைப் பற்றிய விவரங்களை இணையத்தில் தேடியுள்ளனர்.
“மேடையில் பாடியதற்கு இப்போது இந்த அளவுக்குப் பாராட்டும் வரவேற்பும் கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை. ‘சாதகப் பறவைகள்’ இசைக்குழு வழக்கமாக அவர்களுடைய காணொளிகளை இணையத்தில் வெளியிடுவது போன்று இந்தப் பாட்டையும் வெளியிட்டுள்ளனர். அதுதான் இப்போது ‘வைரல்’ ஆகியிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“என் மேல் இவ்வளவு அன்பு காட்டும் மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை,” என்று உணர்ச்சிவசப்படுகிறார் சத்யன்.
“12 வயதில் இருந்தே திரை இசைத்துறையில்தான் உள்ளேன். 200க்கும் மேற்பட்ட சினிமாப் பாடல்களைப் பாடியிருக்கிறேன். தமிழில் மட்டுமே 25 பாடல்கள் இருக்கும். சரியான வாய்ப்புகளுக்காக இப்போதும் போராடிக் கொண்டிருக்கிறேன்.
“எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு நாள் வெளிச்சம் வரும். என் வாழ்க்கையில் இப்போதுதான் வெளிச்சம் பட்டிருக்கிறது.
“நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதிதான். அப்பா மகாலிங்கம், அம்மா மாரியம்மாள். மூன்று பெண்களுடன் மொத்தம் ஐந்து குழந்தைகள். மூத்த அண்ணனுக்குப் பிறந்ததிலிருந்து பேச்சு வராது. அடுத்த ஆண் குழந்தையாவது நன்றாகப் பேசக்கூடிய மகனாகப் பிறக்க வேண்டும் என்று என் அம்மா கடவுளிடம் வேண்டிக்கொண்டாராம்.
“அப்படிப் பிறந்த நான், பேசுவது மட்டுமல்ல, பாடவும் செய்தேன். அதனால் எல்லாருக்குமே அதிக மகிழ்ச்சி,” என்று நினைவுகளைப் புரட்டிப்போடுகிறார் சத்யன்.
இவரது தந்தை எம்ஜிஆரின் தீவிர அபிமானி. அதனால், தாம் பார்த்துவந்த வேலையை உதறிவிட்டு, அதிமுகவில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டார்.
“இன்று நான் பாடுகிறேன் என்றால் அதற்குக் காரணம் என் அம்மாதான். வருமானம் இல்லாமல் வீட்டில் எப்போதுமே கஷ்டம்.
“அண்ணனுக்குப் பேச்சு வரவேண்டும் என்று அம்மா கடவுளிடம் மனமுருகிப் பாட்டுப்பாடி வேண்டிக்கொள்வார். அதைப் பார்த்துத்தான் எனக்குப் பாட வேண்டும் என்ற ஆர்வமே வந்தது. எங்கெல்லாம் இசைக்கச்சேரி நடக்கிறதோ, அங்கெல்லாம் சென்று, மேடையில் பாடுகிறவர்களை உன்னிப்பாகக் கவனிப்பேன்.
“எனக்கும் பாட வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டபோது, தந்தனர். தங்களுடன் என்னையும் சேர்த்துக்கொண்டனர்,” என்கிறார் சத்யன்.
ஆனால், தொடக்கத்தில் இசைக்கருவிகளைச் சுத்தப்படுத்துவதும், அவற்றைத் தூக்கிச் செல்லும் வேலையைத்தான் செய்தாராம். நீண்ட நாள்களுக்குப் பிறகே பாடும் வாய்ப்பு கிடைத்தது.
“இருபது ரூபாயில் தொடங்கியது என் ஊதியம். பள்ளி, கல்லூரி நாள்களிலேயே நன்றாகப் பாடுவேன். அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டுப் போவேன். கச்சேரி முடிந்தவுடன் பேருந்து நிறுத்தத்திலேயே தூங்கியிருக்கிறேன். பாட்டு என்றால் எனக்கு அந்த அளவுக்கு உயிர்.
“தமிழ் ரசிகர்களைக் கவர, மேலும் பல நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன். ஆனால், இசையமைப்பாளர்கள்தான் வாய்ப்பு தரவேண்டும்,” என்று ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் சொல்கிறார் சத்யன் மகாலிங்கம்.

