தமிழர்கள் அனைத்துச் சூழல்களிலும் அறத்தோடு வாழ்ந்தவர்கள் என்பதை சித்திரிக்கும் ‘சல்லியர்கள்’ திரைப்படத்தைக் கூடிய விரைவில் சிங்கப்பூர்த் திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூரின் கார்னிவல் திரையரங்குகளில் அதன் முன்னோட்டக் காட்சிகளைக் காண (மார்ச் 16) ஏறக்குறைய 300 பேர் வந்தனர்.
படத்தின் இணைத் தயாரிப்பாளரும் நடிகருமான கருணாஸ் சிங்கப்பூருக்கு வந்து ‘சல்லியர்கள்’ திரைப்படம் பற்றி ரசிகர்களிடம் பேசினார்.
ஈழத் தமிழ்ப் போர்க்களத்தில் எதிரிகளாக இருந்தாலும் அவர்களின் உயிரைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் மருத்துவப் போராளிகளையே ‘சல்லியர்கள்’ திரைப்படம் மையப்படுத்துகிறது.
கருணாஸ், கரிகாலன் ஆகிய இருவரின் தயாரிப்பில் திரைப்படத்தை ‘மேதகு’ பட இயக்குநர் கிட்டு இயக்கியுள்ளார்.
விறுவிறுப்பான திரைக்கதை, உயிரோட்டமுள்ள நடிப்பு, தரமான இயக்கம், உணர்வுபூர்வ இசை எனப் பல்வேறு அம்சங்கள் இத்திரைப்படத்தை மெருகேற்றுகின்றன.
வசனங்களும் பாடல் வரிகளும் திரையரங்கிலிருந்து வெளியேறிய பின்னும் மனத்தைவிட்டு நீங்க மறுக்கின்றன.
உயிரினும் மேலானது கடமை
இனப் பாகுபாடின்றி உயிரைக் காப்பாற்றும் உயரிய நோக்குடன் செயல்படுபவர்கள் சல்லியர்கள்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களை அழித்து மரணப் பயத்தைப் போராளிகளின் மனத்தில் விதைக்க எதிரிகளின் ஆகாயப்படை தாக்குதல் நடத்துவது படத்தின் முக்கியக் காட்சிகளில் ஒன்று.
வெடிகுண்டுகளால் வீரத்தைச் சிதைக்கமுடியாது என்பதை நிரூபிக்கும் சல்லியர்கள், உயிரைப் பணயம் வைத்துப் போர்க்களத்தில் அடிபட்டோரின் உயிரைக் காப்பாற்றுகின்றனர்.
உயிர் மண்ணுக்காக...
“ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்,” எனப் படத்தில் வரும் ‘சல்லியர்கள்’ வசனம் நெகிழவைக்கிறது.
போராளிகளுக்கு உயிரைவிட பிறந்த மண்ணே உன்னதமானது என்பதைத் திரைப்படம் காட்டுகிறது.
உயிர் துறக்கும் தறுவாயில் ஒரு பிடி மண்ணைக் கையில் எடுக்கும் போராளிகள் காட்சியோடு தொடங்கும் திரைப்படம், தாய்மண் மீதுள்ள அவர்களின் அசைக்கமுடியாத பற்றை வெளிப்படுத்துகிறது.
“உசுரு போனா மண்ணுக்காகப் போகணும் ...” எனக் காதலனிடம் காதலி சொல்லும் வசனம் அதைப் பிரதிபலிக்கிறது.
விதைத்தவரின் தியாகத்தை விதை அறியவேண்டும்
“நாம் நம் உயிரை விதையாக விதைக்கிறோம். ஒரு நாள் அது வெடித்து சுதந்திரமாக நிற்கும்,” எனத் திரைப்படத்தில் கூறுகிறார் கருணாஸ்.
சுதந்திரத்தை தியாகங்கள் மூலம் விதைத்தோரை வருங்காலத் தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கவேண்டும் எனத் திரைப்படம் முடிந்ததும் ரசிகர்களிடம் கருணாஸ் வலியுறுத்தினார்.
“தமிழர்களின் மிகப் பெரிய பிரச்சினை நம் வரலாற்றை நாம் பாதுகாக்கத் தவறுவது. இப்போது இருக்கும் வரலாற்றையாவது நம் வருங்காலத் தலைமுறையினரிடம் எடுத்துச்சொல்லவேண்டும்,” என்றார் அவர்.