‘சக்தித் திருமகன்’ திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் திருப்தி ரவீந்திரா. இது அருண் பிரபு இயக்கத்தில் உருவாகும் விஜய் ஆண்டனியின் 25வது படம்.
இந்தப் படத்துக்காக இரண்டு மாதங்கள் இணையம் வழி சமூக ஊடகத்தில் சேர்ந்து தமிழ் படித்துள்ளார் திருப்தி. மேலும், சில தமிழ்ப் படங்களையும் பார்த்து தமிழில் பேசக் கற்றுக்கொண்டாராம்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள குலேதான் இவருக்குச் சொந்த ஊராம். தந்தை பள்ளி ஆசிரியர். தாயார் குடும்பத் தலைவி.
பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். கல்லூரியில் படிக்கும்போதே நடிப்பின் மீது ஆர்வம் வந்துவிட்டதாம்.
திரைத்துறையுடனான தனது தொடர்புக்கு அடிப்படையாக அமைந்தது இந்த ஆர்வம்தான் என அண்மைய ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் திருப்தி.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணான இவர், படிப்பு முடிந்ததும் வேலைக்குப் போக வேண்டும் என்று மற்றவர்களைப் போல் ஆசைப்பட்டுள்ளார். இதற்கேற்ப, பெரிய பன்னாட்டு நிறுவனத்திலும் வேலை கிடைத்து, கை நிறைய சம்பாதித்தாராம். எனினும், அந்தப் பணியில் மனநிறைவு கிடைக்கவில்லை என்பதுடன், ஏதோ ஒன்றை இழந்ததாகவும் உணர்ந்தாராம்.
அப்போதுதான், எதற்காக பிடிக்காத ஒரு வேலையைச் செய்ய வேண்டும்? ஏன் பிடித்த வேலையைச் செய்யக்கூடாது என்ற கேள்வி திருப்தியின் மனத்தில் எழுந்துள்ளது.
அதன் பின்னர் புனே நகரில், எங்கு நடிப்புத் தேர்வு நடந்தாலும், தவறாமல் கலந்துகொண்டுள்ளார். இதன் மூலம் சில நண்பர்கள் கிடைத்துள்ளனர்.
“அச்சமயம் புனே திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தங்கள் ‘பிராஜெக்டு’க்காக ‘மாடலிங்’ செய்யும் பெண் தேவை என நண்பர்களிடம் கூற, அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதுதான் எனது கேமரா அனுபவம்.
“கேமரா முன்பு நின்றது, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத, மகிழ்ச்சியான அனுபவம். அந்தவொருக் கணத்தில்தான் எனது எதிர்காலம் சினிமாதான் என்றும் அத்துறையிலேயே நீடிக்க வேண்டும் என்ற மன உறுதியும் மனத்தில் நங்கூரம்போல் இறங்கியது,” என்று பேட்டியில் கூறியுள்ளார் திருப்தி ரவீந்திரா.
கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும், மனம் நிறைந்த கனவுகளோடு, சொந்த ஊரில் இருந்து மும்பைக்கு ரயில் ஏறிவிட்டதாகவும் மும்பையில் தங்கியிருந்தபடி வாய்ப்பு தேடியதாகவும் கூறியுள்ளார்.
‘இன்ஸ்டகிரா’மில் திருப்தியின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, இயக்குநர் அருண் பிரபுவின் உதவியாளர் ஒருவர் இவரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
அதன் பின்னர், தாம் வசனம் பேசி நடிக்கும் காட்சிகளைக் காணொளியாகப் பேசி அனுப்பி வைத்துள்ளார் திருப்தி.
இதையடுத்து, இயக்குநரைச் சந்திக்க அழைப்பு வந்துள்ளது. அதுவும்கூட, இணையம் வழிதான் நடந்ததாம்.
“அந்தக் காணொளி அழைப்பிலேயே, இயக்குநர் அருண் கேட்டுக்கொண்டபடி மீண்டும் நடித்துக் காண்பித்தேன். சில நாள்களிலேயே சென்னைக்கு வரும்படி அழைப்பு விடுத்து வாய்ப்பும் அளித்தனர்.
“முதல் நாள் படப்பிடிப்பிலேயே விஜய் ஆண்டனியுடன் நடித்த காட்சிகள்தான் படமாக்கப்பட்டன. அப்போது நடப்பதெல்லாம் உண்மைதானா என்று எனக்குள் வியப்பாக இருந்தது. என் கனவு மெய்ப்பட்ட நாள் அது.
“தமிழ் மக்கள் அன்பானவர்கள். எந்தக் கட்டத்திலும் நான் என்னுடைய சொந்த ஊர் மக்களிடம் இருந்து விலகியிருந்ததுபோல் உணரவே இல்லை. தமிழகத்தில் அனைவரும் என்னைத் தங்கள் வீட்டு மகளாகக் கருதி அன்புடன் பார்த்துக்கொண்டது என்னை நெகிழ வைத்துள்ளது,” என்று கூறியுள்ளார் திருப்தி.

