நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் முன்னோட்டக் காட்சி வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தைப் பாவனா ஸ்டூடியோஸ் சார்பில் திலீஷ் போத்தன், ஷியாம் புஷ்கரன் ஆகியோருடன் இணைந்து நடிகர் பகத் பாசில் தயாரித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய பகத் பாசில், “வணக்கம் சென்னை. எப்போதும் தரமான திரைப்படங்களை வழங்கவேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். அந்த வகையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படமும் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படமாகும்.
“தயாரிப்பாளர்களாக நானும் திலீஷும் ஷியாமும் எங்கள் பயணத்தை 2018ல் தொடங்கினோம். இது எங்களின் எட்டாவது படம். நாங்கள் எப்போதும் எங்களுக்கு மிகவும் நெருக்கமான, எங்களுக்கு சிறந்த தேர்வாகத் தோன்றும் திரைப்படங்களையே தயாரித்து வருகிறோம். இந்தப் படமும் அதில் ஒன்று,” என்று குறிப்பிட்டார்.
தமிழ்த் திரையுலகுடனான தமது தொடர்பை நினைவு கூர்ந்த பகத் பாசில், “என் தந்தை பாசில் இங்கு பல அருமையான திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். அதனால் தமிழ்த் திரையுலகம் எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமானது. ‘மெய்யழகன்’ பிரேமுடன் நான் இணைந்து பணியாற்றியுள்ள அடுத்த தமிழ்த் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது,” எனத் தெரிவித்தார்.
காதல், நகைச்சுவை கலந்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ஏற்கெனவே மலையாளத்தில் வெளியாகி ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) தமிழில் வெளியாகிறது.


