‘மாஸ்க்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் படத்திற்குப் பலவகைகளிலும் உதவி செய்ததை நினைவுகூர்ந்து அவருக்கு மேடையில் நன்றி கூறினார் நடிகை ஆண்ட்ரியா.
ஆண்ட்ரியா, எஸ்.பி சொக்கலிங்கம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘மாஸ்க்’. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியிருக்கும் ஆண்ட்ரியா, படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து இருக்கிறார்.
வெற்றிமாறன் வழங்கும் இந்தப் படத்தை ஆண்ட்ரியாவும் எஸ்.பி சொக்கலிங்கமும் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும், நடிகையாகவும் மிக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் ஆண்ட்ரியா.
கவின் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்கர்னன் இயக்கியுள்ள ‘மாஸ்க்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இசைவெளியீட்டு விழாவில் பேசிய ஆண்ட்ரியா, “நான் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பல நாள்கள் ஆகிவிட்டன.
“ஒருநாள் கதையை இயக்குநர் வெற்றிமாறனிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன். அவர் கதையைப் படித்துவிட்டு அருமையாக இருக்கிறது. உன்னுடைய கதாபாத்திரம் எதிர்மறையான வேடமாக இருக்கிறதே. தொடர்ந்து உன்னை இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கத்தானே கூப்பிடுவார்கள்? ஏன் இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தாய்? என்று வருத்தமாகக் கேட்டார்.
“இப்போது யாருமே என்னைப் படங்களில் நடிக்க அழைப்பது இல்லை. எனவே, நானே படத்தைத் தயாரித்து வில்லியாக நடிக்க இருக்கிறேன் என்றேன். இந்தப் படம் முழுவதும் இயக்குநர் வெற்றிமாறனின் மேற்பார்வையில் எடுக்கப்பட்டது.
அவர் பெரிய மாஸ்டர் மாதிரி, நாங்கள் எல்லாம் அவருடைய கைப்பொம்மைகள். இப்படம் நவம்பர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படம் வெற்றிபெற உங்களின் ஆசி எனக்குத் தேவை,” என்று உருக்கமாக மேடையில் பேசினார் ஆண்ட்ரியா.

