இந்திய இசையை உலக மேடைக்குக் கொண்டு சென்று முத்திரை பதித்த ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும்கூட.
ஆஸ்கார் விருதை வென்ற ரகுமானுக்குச் சொந்தமான ‘ஏஆர்ஆர் ஃபில்ம் சிட்டி’ திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கவரப்பேட்டை ஐயர் பகுதியில் அமைந்துள்ளது. தொழில்நுட்பப் பணிகளை வழங்கும் கூடமான யூஸ்ட்ரீம்ஸ் அதில் அமைந்துள்ளது.
7,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட அந்தக் கூடத்துக்கான திறப்பு நிகழ்ச்சி திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 23) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், திரைப்படத் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்துக் கருத்துரைத்தார்.
“ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பார்த்து அஞ்சக்கூடாது. அனைவரும் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி பிரம்மாண்டமான படங்களை எடுக்கவேண்டும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் படம் எடுக்கலாம்,” என்றார் ரகுமான்.
இதற்கிடையே, 1999ஆம் ஆண்டு வெளியான ‘தால்’ இந்திப் படத்தில் தனது இசையைக் கேட்டுத்தான் ‘பாம்பே டிரீம்ஸ்’ மேடை இசை நாடகத்துக்கு இசையமைக்குமாறு பிரபல பிரிட்டிஷ் இசையமைப்பாளரான ஏண்ட்ரூ லாய்ட் வெபர் தன்னைக் கேட்டுக்கொண்டார் என்று 57 வயது ரகுமான் தெரிவித்துள்ளார். ‘பாம்பே டிரீம்ஸ்’தான் ரகுமானை அனைத்துலக அளவில் பிரபலப்படுத்தியது.
‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘காதலன்’, ‘இந்தியன்’, ‘முத்து’, ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களுக்கு இசையமைத்துப் பிரபலமடைந்த தனக்கு ‘தால்’ படத்தின் இசை மாறுபட்ட ரசிகர்களைச் சென்றடைய உதவியதாகச் சொன்னார் ரகுமான்.
‘தால்’ படத்துக்குப் பிறகே, தமிழ் இசையை மட்டும் இயற்றும் தென்னிந்தியர் என்ற பெயரையும் தாண்டி தனக்கு அங்கீகாரம் கிடைத்ததாக ரகுமான் சொன்னார். ‘ஸ்லம்டாக் மில்லியனேர்’ படத்தில் தனது இசைக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகளை அவர் தட்டிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் ரகுமான்.
‘தால்’ படத்தைத் திரையிடுவதற்காக ரேடியோ ராஷா வானொலி ஏற்பாடு செய்த சிறப்பு நிகழ்ச்சிக்கு மத்தியில் ரகுமான் பேசினார். ‘தால்’ வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இந்தியாவின் சில திரையரங்குகளில் மறுவெளியீடு காணவுள்ளது.
ஐஸ்வர்யா ராய், அனில் கபூர், அக்ஷய் கன்னா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள ‘தால்’, அதன் பாடல்களுக்காகவும் பின்னணி இசைக்காகவும் இன்றும் பலராலும் விரும்பப்படுகிறது.
‘தால்’ தமிழிலும் ‘தாளம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு பிரபலமடைந்தது. 1995ஆம் ஆண்டு ‘ரங்கீலா’ இந்திப் படத்திற்கு இசையமைத்த பிறகு சுபாஷ் காய் படம் ஒன்றுக்கு இசையமைக்குமாறு பலர் தன்னிடம் வேண்டுகோள் விடுத்தனர் என்றும் ரகுமான் தெரிவித்தார்.