சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் கலாநிதி மாறனின் மகளும் ‘சன்ரைசர்ஸ் ஹைதராபாத்’ கிரிக்கெட் அணியின் நிர்வாகியுமான காவ்யா மாறனும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே அனிருத்தும் காவ்யா மாறனும் காதலித்து வருவதாகச் சமூக ஊடகங்களில் செய்திகள் வலம்வந்தன.
இந்நிலையில், நவம்பர் 11ஆம் தேதி, கிரீஸ் நாட்டில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எழில் கொஞ்சும் கடற்கரைகளும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட கிரீஸ் நாட்டில், மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் திருமண நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. விருந்தினர்களை அழைத்துச் செல்ல நான்கு சிறப்புத் தனி விமானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திருமணத்தைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் இருவரும் தெலுங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். இச்செய்தியைத் தெலுங்கானா முதல்வரின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கமும் உறுதிப்படுத்தியுள்ளது.
வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் எனப் பல பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணக் கொண்டாட்டங்களுக்காக அனிருத், நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குத் தனது இசைக் கச்சேரிகள், இசையமைப்புப் பணிகளை ஒத்திவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
‘கூலி’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், அனிருத்தை ‘திருமணத்துக்காகக் காத்திருக்கும் மிகவும் தகுதிவாய்ந்த பிரம்மச்சாரி (இளையர்)’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
“அனிருத்துக்கு நல்ல தோற்றம், தொழில், நல்ல குடும்பப் பின்னணி என அனைத்தும் உள்ளன. எதிலும் குறையில்லை. அவருக்குத் திருமணம் செய்துவைக்கக் குடும்பத்தினர் ஆவலோடு உள்ளனர்,” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றிப் படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ள அனிருத்தின் திருமணச் செய்தி, அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
