விளையாட்டாக ஆரம்பித்தது வாழ்க்கையாக மாறிவிட்டது: அன்னாபென்

3 mins read
c993a1f4-5114-441a-a160-c684d3b598b5
நடிகை அன்னா பென். - படம்: ஊடகம்

ஒரு விளையாட்டாகத்தான் திரையுலகில் நுழைய ஆரம்பித்தேன். இன்றைக்கு அந்த விளையாட்டே எனது பொன்னான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துவிட்டது போல் உணர்கிறேன் எனப் புன்னகைக்கிறார் நடிகை அன்னா பென்.

‘கும்பலாங்கி நைட்ஸ்’, ‘ஹெலன்’ உள்ளிட்ட மலையாளப் படங்களுக்காக பெரும்பாலான திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றவரான அன்னாபென், இப்போது ‘கொட்டுக்காளி’ படம் மூலமும் பிரபலமாகி உள்ளார்.

எந்த வசனங்களும் இல்லாமல் பார்வைகள், முக பாவங்கள், உணர்வுகள் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தி உலகளவில் அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் இவர் குவித்து வருகிறார்.

தமிழக வார இதழ் ஒன்றுக்கு அன்னாபென் அளித்துள்ள நேர்காணலில், இப்படித்தான் திரையுலகுக்குள் அறிமுகமாக வேண்டும். இப்படியான கதைகளில்தான் நடிக்கவேண்டும் என எதுவுமே நான் திட்டமிடவில்லை. எல்லாம் தானாக அமைந்து வருகிறது.

எனது நடிப்பும் திறமையும் ஒரு கதைக்குத் தேவைப்பட்டால் அந்தக் கதையே என்னைத் தானாகவே தேர்வு செய்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

மற்றபடி பெரிய நடிகை ஆகவேண்டும், உச்ச நடிகர்களுடன் நடிக்கவேண்டும். இப்படி எதுவும் நான் யோசிப்பது கிடையாது.

என்னை நம்பி கதைகள் வருகின்றன. அவற்றை நம்பி நான் நடிக்கிறேன். அவ்வளவுதான் என்று வெளிப்படையாகப் பேசுகிறார்.

எனது அப்பா திரைக்கதை எழுத்தாளர் பென்னி பி. நயரம்பலம். நான் பிஎஸ்சி ஃபேஷன் டெக்னாலஜி முடித்துவிட்டு முதுகலை பட்டப் படிப்பை படிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

அப்போது, விளையாட்டாகச் சென்று ‘கும்பலாங்கி நைட்ஸ்’ பட ஒத்திகையில் கலந்துகொண்டேன். தொடர்ந்து மூன்று முறை இவ்வாறு கலந்துகொண்டு, அத்தனையிலும் தேர்வாகி படத்திலும் நடித்துவிட்டேன்.

படம் வெளியானபிறகுதான் எனது அப்பாவை அழைத்துச்சென்று திரையரங்கில் நான் நடித்துள்ள படத்தைக் காண்பித்தேன். அப்பாவுக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது.

நான் விளையாட்டுக்காக நடிக்க வரவில்லை. உண்மையாகவே படத்தில் நடிக்க எனக்கு ஆர்வம் இருப்பதை அப்பா புரிந்துகொண்டார்.

முதல் படமே எதிர்பார்த்ததைவிட அதிக பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் கொடுத்ததால், இனிமேலும் விளையாட்டாகக் கதைகளைத் தேர்வு செய்யக்கூடாது என அப்பாவும் நானும் முடிவெடுத்தோம். இப்போது எனது அப்பாவும் என்னுடன் சேர்ந்து கதைகளைக் கேட்டு வருகிறார் என்று சொல்கிறார் அன்னாபென்.

‘கொட்டுக்காளி’ பட இயக்குநர் வினோத் ராஜ் எனக்குப் புரியும்படி கதையை விளக்கிச் சொன்னார். எனக்கு இப்படத்தில் பேசுவதற்கு வசனமே இல்லை என்பதால் நடிப்பது எளிமையாக இருந்தது.

அடங்காப்பிடாரியாக, பிடிவாதம் பிடிக்கும் பெண்ணாக நடித்திருந்தது உண்மையிலேயே எனது திரைப்பயணத்துக்கு பெரிய திருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார் அன்னாபென்.

நடிகர் சூரியின் நடிப்பைக் கண்டு தான் பெரிதாக வியப்படையவில்லை என்று கூறுபவர், ஒரு நடிகர் நகைச்சுவையாக நடித்து ரசிகர்களைச் சிரிக்க வைத்துவிட்டார் என்றாலே மற்ற உணர்வுகளை அவரால் மிகவும் எளிதாக வெளிப்படுத்திவிட முடியும்.

அந்த வகையில் சூரி ஏற்கெனவே மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக இருப்பதால், மற்ற நடிப்பு எலலாம் அவருக்கு அத்துபடி என்பது தெரியும்.

அவரும் மதுரை பக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஒரு சில காட்சிகளில் எப்படி நடிக்கவேண்டும் என எனக்கு சொல்லிக்கொடுத்தார். உலக அரங்கில் ‘கொட்டுக்காளி’ பல அங்கீகாரங்களை எனக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது என்கிறார்.

‘கல்கி 2898 ஏடி’ பட வாய்ப்பு நல்ல பாடமாக அமைந்தது. ஒருசில பெரிய படங்களில் நாம் இருப்பதே பெரிய அங்கீகாரம்தான். இப்படம் எனக்கு இந்திய அளவில் ஒரு நல்ல அறிமுகம் கொடுத்துள்ளது. அந்தப் படத்தில் ராஜமெளலி, துல்கர் சல்மான் உள்ளிட்ட மிகப்பெரிய ஆளுமைகளும் சிறிய பாத்திரங்களைத்தான் செய்துள்ளார்கள். அங்கேயும் எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் பெரும் திருப்தி அடைந்துள்ளேன் என்கிறார் அன்னாபென்.

குறிப்புச் சொற்கள்