தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான் அனுபவிப்பது ஒரு தாயின் வலி: பிருத்விராஜ் தாயார் உருக்கம்

2 mins read
555ad34f-577e-40c7-9037-f4ef52b6be95
பிருத்விராஜ். மல்லிகா சுகுமாரன், மோகன்லால். - படம்: ஊடகம்

மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எம்புரான்’ படம் வசூலில் சாதனை புரிந்து வந்தாலும், இப்படத்திற்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்புகள் படக்குழுவுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை நினைவுப்படுத்தும் வகையிலும் இந்துத்துவ கொள்கைகளையும் தலைவர்களையும் இழிவுபடுத்தும் வகையிலும் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக ஒரு தரப்பினர் சாடியுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் நாயகன் மோகன்லால் தனது சமூக ஊடகப் பக்கத்தில் மன்னிப்புக் கோரி சர்ச்சையான காட்சிகளை நீக்குவதாக கூறியிருந்தார். மேலும், சர்ச்சைக் காட்சிகளை நீக்கிவிட்டதாக படக்குழுவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தனது மகனைக் குறிவைத்து இதுபோன்ற நெருக்கடிகளை சிலர் ஏற்படுத்துவதாகவும் ஒரு தாயாக தன் மனம் வலிப்பதாகவும் பிருத்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாரன் கூறியுள்ளார்.

“சிலர் வேண்டுமென்றே பிருத்விராஜ், நடிகர் மோகன்லாலை ஏமாற்றிவிட்டார் எனவும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் எம்புரான் படத்தை எடுத்து அதை கையகப்படுத்தினார் என்றும் பிரசாரம் செய்துள்ளனர்.

“இந்தப் படத்தின் திரைக்குப் பின்னால் என்ன நடந்தது என்பதை அறிந்ததும் சிலர் பிருத்விராஜை தனிமைப்படுத்த முயற்சி செய்வது மிகவும் வேதனை அளிக்கிறது. இது ஒரு தாயின் வலி.

“இதை வெளிப்படையாகச் சொன்னதற்காக என்னைக் கேலி செய்யாதீர்கள். பிருத்விராஜ் தங்களை ஏமாற்றினார் என்று மோகன்லாலோ அல்லது தயாரிப்பாளர் தரப்பிலோ இதுவரை சொல்லவில்லை.

“மோகன்லால் என் சகோதரரைப் போன்றவர். சிறுவயதிலிருந்தே லாலை எனக்குத் தெரியும். மோகன்லால் என் மகன்களை பல மேடைகளில் பாராட்டியிருக்கிறார்.

“ஆனால், லால் அல்லது தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமல் சிலர் என் மகனைப் பலிகொடுக்க முயற்சிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது,” என்று சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார் மல்லிகா சுகுமாரன்.

தனது மகன் பிருத்விராஜ் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் ஒருபோதும் அவருக்கு அப்படியோர் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை வெடித்ததும் மலையாளத் திரையுலகில் இருந்து நடிகர் மம்மூட்டி மட்டுமே தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்ததாகவும் பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவரது ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டதும் கண்கலங்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார் மல்லிகா சுகுமாரன்.

இதற்கிடையே, எம்புரான் படத்தின் வசூல் ரூ.200 கோடியைக் கடந்துள்ளது. படத்தில் 17 இடங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக மூன்று நிமிட காட்சிகளை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, தடை விதிக்க மறுத்துவிட்டார்.

“கிட்டத்தட்ட ஒரு வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தால் தூண்டப்பட்ட ஏதேனும் வன்முறை சம்பவத்தை சுட்டிக்காட்ட முடியுமா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், இது விளம்பரத்துக்காகத் தொடுக்கப்பட்ட வழக்கு என்றும் அவர் மனுதாரரைக் கண்டித்தார்.

குறிப்புச் சொற்கள்