எதிர்வரும் பிப்ரவரி 22ஆம் தேதியன்று சென்னையில் பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையொட்டி கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பிரபுதேவா.
இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில், நடனம் அமைப்பது குறித்த சில தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.
“ஒரு பாடலைக் கேட்டுவிட்டு, மேற்கத்திய நடனத்தையும் பரதநாட்டியத்தையும் திட்டமிட்டு இணைத்து ஆடமாட்டேன். அது எனக்குள் தானாகவே உருவாகி விடும். அதனால் நடன அசைவுகள் இயல்பாகவே நன்றாக அமையும். இதை என்னிடம் உள்ள ஒரு தனித்தன்மை என்றுகூட கூறலாம்.
“நான் நடனத்துறையில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். திரையுலகில் அறிமுகமான புதிதில் இருந்த பயமும் ஆர்வமும் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது. அதனால்தான் புத்துணர்வுடன் செயல்பட முடிகிறது.
“என்னுடைய நடன உலகம் வேறு மாதிரியானது. அதற்குள் இருக்கும்போது நடனம் மீதான ஆர்வம் குறைவதே இல்லை,” என்று பிரபுதேவா குறிப்பிட்டுள்ளார்.
ஒருமுறை மும்பையில் தனது நண்பரின் காரில் சென்று கொண்டிருந்தாராம் பிரபுதேவா. அந்தக் கார் போக்குவரத்துச் சந்திப்பில் நின்றபோது, ஒரு கையும் ஒரு காலும் இல்லாத இளையர் காசு கேட்டு கார் கதவைத் தட்டியுள்ளார்.
“அவருக்கு உதவ நினைத்து கார் கண்ணாடியை கீழே இறக்கினேன். ஆனால் அவரோ, என்னைப் பார்த்ததும் மிகுந்த உற்சாகமாகி, அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு நடனமாடத் தொடங்கிவிட்டார்.
“அவரைப் பார்த்த என் நண்பர், ‘இதைவிட உனக்கு வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்?’ என்று கேட்டார். அந்த நெகிழ்ச்சியான தருணத்தை மறக்கவே இயலாது,” என்றும் பிரபுதேவா பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.