எந்த நாட்டுக்குச் சென்றாலும் நலம் விசாரிக்கிறார்கள்: மம்தா

3 mins read
8e054719-f7c3-4f19-bb9a-d2ded1f07967
மம்தா மோகன்தாஸ். - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘மகாராஜா’ திரைப்படம் தம்மை உலக அளவில் சேர்த்துவிட்டதாகச் சொல்கிறார் மம்தா மோகன்தாஸ்.

தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த பின்னர் ‘சிவப்பதிகாரம்’, ‘தடையற தாக்க’ என்று சில நல்ல படங்களில் நடித்தவர் திடீரென மாயமாகிவிட்டார். இடையில் மலையாளப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்பட்டது.

“உண்மைதான். இடையில் எட்டு ஆண்டுகள் அமெரிக்காவிலேயே தங்கிவிட்டேன். எனினும் தவிர்க்க முடியாத சில மலையாளப் படங்களில் நடித்து வந்தேன்,” என்று குமுதம் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் மம்தா.

ஒரு கதையோ, கதாபாத்திரமோ தன்னை மனதளவில் பாதித்தால் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துள்ள மம்தா, சில கதைகள் உணர்வுபூர்வமாக மனதைத் தொட்டுவிடுவதாகவும் அத்தகைய படங்களில் நடிக்க உடனே கால்ஷீட் ஒதுக்குவதாகவும் கூறுகிறார்.

அப்படித்தான் ‘தடையற தாக்க’, ‘எனிமி’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களை ஏற்றுக்கொண்டாராம்.

“எனக்கு ‘மகாராஜா’ படத்தில் சிறிய வேடம்தான். ஆனால் அதையும்கூட நினைவில் வைத்திருந்து, சிங்கப்பூர், ஜப்பான் என்று எந்த நாட்டுக்குச் சென்றாலும் என்னை அடையாளம் கண்டு நலம் விசாரிக்கிறார்கள். எல்லாம் ‘மகாராஜா’ படம் செய்த மாயம். அந்தப் படம் உலக அளவில் ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளது,” என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார் மம்தா.

‘மகாராஜா’வுக்குப் பிறகு அதேபோன்ற கதையம்சம் உள்ள பட வாய்ப்புகள்தான் தேடிவந்தனவாம். எதுவும் மனதைத் தொடும் அளவுக்கு இல்லை என்பதால் எந்த வாய்ப்பையும் மம்தா ஏற்கவில்லையாம்.

அந்தச் சமயத்தில்தான் ‘மை டியர் சிஸ்டர்’ பட வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. திருநெல்வேலியில் நடக்கும் கதை. முழுக்க முழுக்க வணிக அம்சங்கள் நிறைந்த படம். அக்கா, தம்பி இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை வைத்து அருமையான திரைக்கதையுடன் உருவாகி உள்ளது.

“நடிகர் அருள்நிதிதான் என்னுடைய தம்பியாக நடித்துள்ளார். பெண்கள் என்றாலே வெறுப்புடன் பேசக்கூடிய பாத்திரம். எனக்கோ அதற்கு நேரெதிரான வேடம். நானும் அருள்நிதியும் நகைச்சுவையில் அதகளம் செய்துள்ளோம். நெல்லைக்கே உரித்தான ஊர்ச் சண்டைகளையும் காட்சிப்படுத்தி உள்ளனர். படப்பிடிப்பின்போதே எல்லாரும் வாய்விட்டுச் சிரித்தனர். படம் நிச்சயம் வெற்றிபெறும்,” என்று கூறியுள்ள மம்தா, இந்தப் படத்தில் இரண்டு பாடல்களையும் பாடியுள்ளார்.

கேரளாவில் பல இசைத் தொகுப்புகளிலும் பாடிய அனுபவம் உண்டாம்.

“டாடி மம்மி வீட்டில் இல்ல’ போன்ற பாடல்களை ஊர் திருவிழாக்களில் ஒலிக்கச் செய்து இளையர்கள் குத்தாட்டம் போடுவதைப் பார்க்கும்போது மனத்தில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.

அதேபோல் உணவகங்கள், தேநீர்க் கடைகளிலும் என் பாடல்கள் ஒலிப்பதைக் கேட்டுள்ளேன்,” என்று மம்தா கூறியுள்ளார்.

திருநெல்வேலி, மதுரை பகுதிகளில் கிடைக்கும் மீன் உணவுகளைச் சாப்பிடுவாராம். தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒவ்வோர் ஊருக்கும் ஏதாவது ஓர் உணவு வகை அல்லது நொறுக்குத்தீனி சிறப்பு சேர்க்கிறது.

“அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகின் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது. ‘டிராகன்’ படம் பார்க்க சுவாரசியமாக இருந்தது.

“இனி திரையரங்குகளில் ஓடக்கூடிய படங்களை மட்டும் எடுத்தால் போதாது. இன்று சினிமாவுக்கு உலக அளவில் பெரிய சந்தை உள்ளது. எந்த மொழிப் படமாக இருந்தாலும், உலக ரசிகர்கள் பார்க்கிறார்கள். எனவே நல்ல படைப்புகளை உருவாக்கினால் நிச்சயம் வெற்றி பெறலாம்,” என்கிறார் மம்தா மோகன்தாஸ்.

குறிப்புச் சொற்கள்