ஊடகங்களில் துக்க நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் அஞ்சலி நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில அசௌகரியங்களைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல் தலைவர் தியாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று. அது இயற்கையின் தீர்மானத்திற்கு உட்பட்டது என்பதை இவ்வுலகில் பிறந்த எல்லா உயிர்களும் அறியும்.
“ஆறறிவு கொண்ட மனிதன் இன்னும் சற்றே அதிகமாகவே அதை உணர்ந்தவன். மரண வீடுகள் மௌனிக்கப்படவும் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளவும் துயர்கொள்ளவும் வேண்டியவை.
“யாரோ இறந்துபோனா.. எனக்கும் அவருக்கும் என்ன? ஒருவரின் அழுகையோ துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்? ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா?
“பார்வையாளர்களைக் கொண்டு வரும் என்ற எண்ணம் எத்தனை இரக்கமற்றது? கொடியது?
“நாம் மற்றொருவரின் மரணத்தையோ இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமோ என்ற கவலை வலுக்கிறது.
“ஊடகங்கள் கார்களின் உள்ளேயும் நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்?
தொடர்புடைய செய்திகள்
“அதுவும் முண்டியடித்துக்கொண்டு துக்க முகங்களைக் காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம் கிடைத்துவிடப் போகிறது? இனி வரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் அறவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும்.
அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும், பத்திரிகை தொடர்பாளர் யூனியனும் இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வைக் காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று அறிக்கையில் தயாரிப்பாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

