‘சக்கரகட்டி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சாந்தனு பாக்யராஜின் திரைப்பயணம் 17 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதைச் சொல்லும்போது, அவரும் வியந்துபோகிறார்.
கடந்த ஆண்டு தமிழில் வெளியான ‘புளூ ஸ்டார்’ படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
தற்போது மலையாளத்தில் ‘பல்டி’, தமிழில் ‘மெஜந்தா’ என சில படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சாந்தனு.
இவரை நேரில் சந்திக்கும் அனைவருமே, ‘திடீரென மலையாளக் கரையோரம் ஒதுங்கிவிட்டீர்களே’ என்றுதான் தவறாமல் கேட்கிறார்களாம்.
அண்மையில் நஸ்ரியாவுடன் இணைந்து, ‘மெட்ராஸ் மிஸ்ட்ரி’ என்ற இணையத் தொடரில் நடித்தபோது, அதன் இணை இயக்குநர் ஒருவர்தான், ‘மலையாளப் பக்கம் வாருங்கள், நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்’ என்றாராம்.
அப்படி அமைந்த வாய்ப்புதான் ‘பல்டி’. தமிழக, கேரள எல்லைப் பகுதியில் நடக்கும் கதை. கபடி வீரர் வேடம். அதனால், அந்த விளையாட்டுக்கான உடல் மொழி கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதற்காக, 20 நாள்களுக்கு கபடிப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சாந்தனு. மேலும், இணையம் வழி ஒரு மாதம் மலையாளத்தில் பேசவும் பயிற்சி எடுத்துக்கொண்டாராம்.
“சண்டைக் காட்சிகள் மிக இயல்பாக இருக்கும். திரைப்படத்துக்காக மலையாளம் கற்றுக்கொண்டேன். அதனால் நான் மலையாளியாக மாறிவிட முடியாது என்றாலும், நான் நடித்துள்ள கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருப்பதாகக் கருதுகிறேன்,” என்கிறார் சாந்தனு.
பாக்யராஜின் மகன் என்பது தனக்கு ஒருவித அழுத்தத்தைத் தருவதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர், திரைத்துறையைப் பொறுத்தவரை, ஒருவர் யார் வீட்டில் இருந்து வருகிறார் என்பது முக்கியமல்ல என்றும் திறமை மட்டுமே கவனிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
“சினிமாக்காரர்கள் நம்மைக் கைவிடலாம். ஆனால், சினிமா கைவிடாது. ஏதோ ஓர் மூலையில் எனக்கான பணிகளை நேர்மையாகச் செய்து வருவதால்தான் திரைத்துறை எனக்கான வாய்ப்பை அளிக்கிறது. மற்றபடி, நான் பாக்யராஜின் மகன் என்பது பெரிய அழுத்தம்தான்.
“பல இடங்களில் பாக்யராஜ் மகன் என்பதால் பலரை அணுகுவது எளிதாக இருக்கும். ஆனால், வாய்ப்புகள் எளிதில் கிடைத்துவிடாது. என் அறிமுகம் அப்பாவின் பெயரால் கிடைத்தது என்றாலும், அதன் பிறகு என் உழைப்பால் மட்டுமே நிலைத்திருக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டேன்.
“வெற்றி என்பது எளிதாகக் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அதனைத் தக்கவைத்துக்கொள்வது மிகக் கடினம். நானும் கடினமான பல காலகட்டங்களைக் கடந்து வந்துள்ளேன். என் பெற்றோரும் மனைவியும் அந்தக் கடினமான காலங்களில் உடனிருந்தனர்,” என்கிறார் சாந்தனு.
தொடக்கம் முதல் தான் சந்திக்கும் போராட்டங்களை அருகில் இருந்து கவனித்து வரும் பெற்றோரிடம், தங்கள் மகனுக்கு உரிய அங்கீகாரமும் இடமும் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இன்றுவரை நீடிப்பதாக அப்பேட்டியில் சோகத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அப்பா பலமுறை, ‘நான் வேண்டுமானால் யாரிடமாவது பேசட்டுமா’ என்று கேட்பார். ஆனால், நான்தான் வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.
“அப்பாவின் பெயரைப் பயன்படுத்த விரும்பவில்லை. வெற்றியோ தோல்வியோ அது என்னை மட்டும் சார்ந்ததாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்று அந்தப் பேட்டியில் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் குறிப்பிட்டுள்ளார் சாந்தனு.