தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்த் திரையுலகின் அடுத்த தளபதி யார்?

4 mins read
d2661272-9fb5-495c-9c54-0839aa8dab31
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி யார் என்பதுதான் தமிழ்த் திரையுலகில் திரும்பிய பக்கமெல்லாம் பேச்சாக இருக்கிறது.

இதற்குக் காரணம், தமிழ் சினிமாவின் தளபதியாக இருந்துவரும் விஜய், அரசியல் தளபதியாக அவதாரம் எடுத்திருப்பதுதான்.

கமல்ஹாசன் மக்கள்நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். ஆனால் உஷாராக, சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன் என அறிவித்துவிட்டார். இதுபோதாதா?

கமல் நடித்து தயாரித்த விக்ரம் படத்தை பலகோடி ரூபாய் விலைபேசி, வாங்கிக்கொண்டது தமிழக துணை முதல்வர் உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனம்.

இதனால் இன்ப அதிர்ச்ச்சிக்கு ஆளான கமல், திமுக பக்கம் சாய்ந்துவிட்டார்.

அப்படியொரு நிலைமைக்கு தான் ஆளாகிவிடக் கூடாது என்பதால் தனது 69வது திரைப்படத்துடன் நடிப்பிற்கு முழுக்கு என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். அண்மையில் தவெக மாவட்டச் செயலாளர்கள் மாநாட்டில்கூட ஆண்டுக்கு ஒருபடமாவது நடிக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் விஜய் அதை ஏற்கவில்லை.

அதன் பிறகே `சினிமாவில் விஜய்யின் இடம் இனி யாருக்கு?` என்கிற விவாதம் தீவிரமடைந்துள்ளது.

விஜய் அரசியலுக்கு வருவது என்ற முடிவை எடுக்கும் முன்பே `புரட்சித் தளபதி’ என விஷாலும் ‘சின்னத் தளபதி’ என பரத்தும் போட்டுக் கொண்டனர். சினிமாவில் குறிப்பிட்ட நடிகரின் ரசிகர் என்பதைத் தாண்டி பொதுவான ரசிகர்களையும் ஈர்ப்பவரே, மக்களை வசீகரிப்பவரே செல்வாக்கான நடிகராக இருக்க முடியும்.

எம்ஜிஆர் ‘மக்கள் திலகம்’ என உருவெடுத்ததும், ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் என இருப்பதும், அவரவர் ரசிகர்களை மட்டுமே வைத்து அளக்கப்பட்டதல்ல. பொதுவான ரசிகர்களை; மக்களை ஈர்த்ததால்தான்.

விஜய்க்கும் அப்படியான பொதுவான ரசிகர்களின் செல்வாக்கு இருப்பதை மறுக்க முடியாது.

அதிரடி ஆக்‌ஷன், ஸ்டைல், நகைச்சுவை ஆகிய மூன்று கலவையில் படம் தருகிற நடிகர்களை கொண்டாடித் தீர்ப்பார்கள் தமிழ் ரசிகர்கள். அந்த வகையில் விஜய்யின் ‘கில்லி’ படம் ரசிக்கப்பட்டது. ‘சச்சின்’ படமும் ரசிகைகளால் சிலாகிக்கப்பட்டது. அதிலும் பெரிய நடிகர், நடிகையர் வீட்டுக் குழந்தைகள் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்தனர்.

உதாரணமாக, சிவாஜியின் பிள்ளைகளான ராம்குமாரும் பிரபுவும் சிறு வயதிலிருந்தே எம்ஜிஆரின் ரசிகர்கள். கமல் பிள்ளைகளுக்கு ரஜினி படங்கள்தான் பிடிக்கும். தனது இரு மகள்களும் விஜய்யின் ரசிகைகள் என குஷ்பு பலமுறை பேட்டியே கொடுத்திருக்கிறார் என விநியோக வட்டாரங்களில் சுட்டிக்காட்டுகின்றனர்.

மூத்த செய்தியாளர் இரா.த.சக்திவேலிடம் தமிழ் முரசு பேசியது.

“சினிமா பின்னணியிலிருந்து வந்தவர் விஜய். அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் `புரட்சி இயக்குநர்’ எனப் பெயர் பெற்றவர். அதனால் அவரே இயக்கி, தயாரித்து மகன் விஜய்யை `நாளைய தீர்ப்பு’ எனும் முதல் படத்திலேயே கதாநாயகனாக்கினார்.

“விஜய்யின் `ரசிகன்’ படத்திற்கு `விமர்சனம்’ எழுதிய பிரபல வார இதழ் ‘இப்படிப்பட்ட முகத்தை காசு கொடுத்துப் பார்க்க வேண்டுமா’ எனக் கடுமையாக குறிப்பிட்டது. பிறகு வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட்டது.

“இப்படியெல்லாம் அவமானங்களைச் சந்தித்தே சினிமாவில் சாதித்தார் விஜய். ரசிகர்களை மட்டுமல்ல, தனது அருமையான நடனத்தால் குழந்தைகளையும் கவர்ந்தார். தென்னிந்தியாவின் முக்கிய நடிகராக உயர்ந்தார்.

“குழந்தைகளையும் பெண்களையும் அதிகம் கவரும் விஜய்யின் அந்தத் தன்மை சிவகார்த்திகேயனிடம் உண்டு. சினிமா பின்னணியில்லாதவர். அவரது தந்தை அப்பா தாஸ், சிறைத்துறை அதிகாரியாக திருச்சியில் பணியாற்றியவர்.

“சிவா படிப்பில் பெரிதாக அக்கறை காட்டாமல் பல குரலில் பேசும் கலையில் ஆர்வம் காட்டினார். குறிப்பாக ரஜினியின் குரலை அப்படியே நகல் எடுத்துப்பேசும் சிவாவின் திறமை பலரை வியக்க வைத்தது.

“ஒருநாள் தந்தை மாரடைப்பால் காலமானார். தன் கலை தாகத்துக்கு வாய்ப்பைத்தேடி சென்னை வந்த சிவா, விஜய் டிவியில் சேர்ந்தார்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து, இன்று பெரிய நட்சத்திரமாகத் திகழும் ஷாருக்கானைப் போல சிவாவும் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகத் திகழ்கிறார்.

“குறிப்பாக எவ்வித உறுத்தலும் இல்லாத நடிப்பைத் தரக்கூடிய சிவா, ரஜினி, விஜய் போலவே குழந்தைகளாலும் அண்ணன் என்கிற இமேஜால் பெண் ரசிகைகளாலும் விரும்பப்படும் நடிகராக ஆகிவிட்டார்.

‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் சிவாவின் தாத்தாவாக நடித்துவிட்டு வந்த இயக்குநர் பாரதிராஜா, ‘நான் சொல்றத எழுதி வச்சுக்கங்க, அடுத்து ரஜினி இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பான். அதற்கான வசீகரமான உடலமைப்பும் ஸ்டைலும் அந்தப் பையனிடம் இருக்கிறது’ என்றார்.

“இன்று, சிவகார்த்திகேயனை வைத்து கமல்ஹாசன் படம் தயாரித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் வெளியான அந்த `அமரன்’ திரைப்படம் சிவாவின் சீரியஸ் நடிப்பிற்கும் மகுடம் சேர்த்திருக்கிறது.

“தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியையும் அவருக்கான இடத்தையும் எவராலும் சூழ்ச்சியால் தடுத்துவிட முடியாது,” என்கிறார் செய்தியாளர் இரா.த.சக்திவேல்.

விஜய்யின் அரசியல் வாழ்விற்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பையடுத்தே நாளைய  தீர்ப்பு அமையும்.

நாளைய தீர்ப்பு... இது விஜய்யின் முதல் படத் தலைப்பு.

குறிப்புச் சொற்கள்