எந்த அடிப்படையில் அல்லது அளவுகோல்களின் அடிப்படையில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ஊர்வசி.
71வது இந்திய தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகர் விருதுக்கு ஷாருக் கான், விக்ராந்த் மெஸ்ஸி ஆகிய இருவரும் தேர்வாகி உள்ளனர். இருவருக்கும் விருது பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சிறந்த துணை நடிகராக எம்.எஸ்.பாஸ்கரும் மலையாள நடிகர் விஜயராகவனும் சிறந்த துணை நடிகையாக ஊர்வசியும் தேர்வாகி உள்ளனர்.
நடிகை ராணி முகர்ஜி சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது தேர்வுக் குழுவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் ஊர்வசி.
“என்னை விருதுக்கு தேர்வு செய்ததற்கு நன்றி. ஆனால் எந்த அடிப்படையில் அல்லது அளவுகோல்களின் அடிப்படையில் சிறந்த துணை நடிகைக்கான விருது, விஜயராகவனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டன?
“விஜயராகவன் துணை நடிகர், ஷாருக்கான் சிறந்த நடிகர் என்றால் இந்த நடிப்பை அவர்கள் எவ்வாறு மதிப்பிட்டார்கள்? எந்த அடிப்படையில் ஒப்பிட்டு மதிப்பிடப்பட்டது?
“விஜயராகவனை சிறந்த துணை நடிகராகவும் ஷாருக்கானை சிறந்த நடிகராகவும் ஆக்கியது எது? சிறந்த நடிகர்கள் இருவர், சிறந்த துணை நடிகர்கள் இருவர். ஆனால், சிறந்த நடிகையாக ஒருவரையும், சிறந்த துணை நடிகையாக ஒருவரையும் தேர்வு செய்திருக்கிறார்கள். ஏன் நடிகைகளுக்கான விருது பகிர்ந்து அளிக்கப்படவில்லை,” என்று கேள்விகளைப் பட்டியலிட்டுள்ளார் ஊர்வசி.
விருது என்பது கொடுப்பதை வாங்கி வைத்துக்கொள்ளும் ஓய்வூதியம் அல்ல என்றும் அது கலைஞர்களுக்கான அங்கீகாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தமது கேள்விகளுக்கு தேர்வுக்குழு உரிய பதில்களை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.