மனைவி சொல்லே எப்போதும் கணவனுக்கு வழிகாட்டும் மந்திரம் என்பார்கள்.
அனுபவசாலிகளின் இந்த வார்த்தைகள் திரைத்துறையினருக்கும் சாலப் பொருந்தும். திரையுலகில் பலவற்றைச் சாதித்த சில நடிகர்களின் வெற்றிக்குப் பின்னால் அவர்களது மனைவிதான் தூண்களாக இருக்கின்றனர்.
பொறுப்பான மனைவி அமைந்தால் கணவனின் வெற்றியைத் தடுக்கவே முடியாது. அவ்வாறு வெற்றி பெற்ற சிலரைப் பற்றி பார்ப்போம்.
[ο] சிவகார்த்திகேயன் - ஆர்த்தி
‘கலக்கப் போவது யாரு’ எனும் நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் கலைத்துறைக்கு வந்தவர், ‘எஸ்கே’ எனச் சுருக்கமாக குறிப்பிடப்படும் சிவகார்த்திகேயன்.
காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால்... ‘மாமா மகள் இருக்கும்போது வெளியில் ஏன் கல்யாணம் பண்ணணும்... மாமா மகள் ஆர்த்திதான் உன் மனைவி,” என்ற தாயின் சொல்லைத் தட்டாமல், சிறிதும் தயங்காமல் சம்மதித்தார் சிவா.
இவர்களது நிச்சயதார்த்தம் 2010 மே மாதம் நடந்தது. 2010 ஆகஸ்ட் 27ல் திருமணம். இந்த மூன்று மாத இடைவெளியில் ஆர்த்தியைக் காதலித்து, தன் திருமணத்தை காதல் திருமணமாக ஆக்கிக்கொண்டார் சிவா.
தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் பெரிதாக அக்கறை காட்ட மாட்டாராம் எஸ்கே.
தொடர்புடைய செய்திகள்
“நீங்கள் சிவப்பா, கருப்பா என்பது முக்கியமில்லை. ஆனால் முகம் பளிச்சென்று இருக்க வேண்டும்,” என்று சொல்லி, முகப்பொலிவை அதிகரிக்கும் அழகுசாதனப் பொருள்களை வாங்கிக்கொடுத்து, முதலில் சிவகார்த்தியின் தோற்றத்தை மாற்றினார் ஆர்த்தி.
சிவகார்த்திகேயனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் பிரான்மலை. (கடையேழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரி ஆண்ட, மலை சார்ந்த ஊர் அது).
சிவாவின் தந்தை தாஸ், சிறைத்துறை அதிகாரியாக திருச்சியில் பணியாற்றினார். அதனால் குடும்பம் திருச்சிக்கு இடம்பெயர்ந்தது.
தந்தை ஜெயிலர் என்பதால் மிகக் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டார் சிவா. அப்பா மாரடைப்பால் காலமான பின், தாயின் கவனிப்பில் வளர்ந்த சிவா, திருமணத்திற்குப் பின் மனைவி ஆர்த்தியிடம் ஆலோசனை கேட்காமல் எதையும் செய்வதில்லை.
கணவருக்கு தொல்லை தரக்கூடாது என்பதால் வீட்டுப் பிரச்சினைகள் எதையும் சிவாவிடம் சொல்லமாட்டாராம் ஆர்த்தி.
தரமான படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற விருப்பம் இவருக்கு உண்டு. அதன்படி, ‘கனா’ படத்தைத் தயாரித்தனர். படப்பிடிப்பு நடக்கும்போது, எவ்வளவு பணம் கேட்டாலும், ‘ஏன்?’ என்று கேட்காமல் கொடுப்பாராம் ஆர்த்தி.
[ο] ஷாருக் கான் - கௌரி
தன் காதலிக்கு முதன் முதலில் காதல் பரிசாக அவர் கொடுத்தது ஒரு ஜோடி ‘பிளாஸ்டிக்’ தோடு. அதன் விலை சுமார் 70 ரூபாய் இருக்கும். இன்று இத்தம்பதியரின் சொத்து மதிப்பு ஏறக்குறையாக 7,000 கோடி ரூபாய்.
அந்த காதல் ஜோடி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ‘எஸ்ஆர்கே’ என அழைக்கப்படும் ஷாருக் கான் - கௌரி கான்.
இருவருக்கும் திருமணமாகி 33 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் இன்றும்கூட கௌரி கானை தங்கள் வீட்டில் சேர்க்கவில்லை அவரது வீட்டார்.
காரணம்... பஞ்சாப் இந்து குடும்பத்தைச் சேர்ந்த கௌரி, மாற்று மதத்தைச் சேர்ந்த ஷாருக் கானை திருமணம் செய்து கொண்டது, அவரது வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ஷாருக் தம்பி சோர்ந்துவிடவில்லை.
1988ஆம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரில் நடிக்கத் தொடங்கினார். 1991ஆம் ஆண்டு கௌரியை திருமணம் செய்துகொண்ட பின்னர் ஷாருக் கானுக்கு ஏறுமுகம்தான்.
ஷாருக் சினிமாவில் தூள் கிளப்ப, கௌரியோ, ‘உள் அலங்காரம்’ எனப்படும் ‘இன்டீரியர் டெகரேஷன்’ நிறுவனத்தை நடத்துகிறார்.
அத்துடன், ஷாருக்கும் கௌரியும் இணைந்து, ‘ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்துகிறார்கள்.
இவர்கள் தயாரித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகி வசூலை வாரிக்குவித்தன.
ஷாருக்கின் இந்த அபார வளர்ச்சியில் கௌரியின் வழிகாட்டலும் யோசனையும் முக்கியமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.
அடுத்த கட்டமாக, சினிமா தொடர்புகளைத் தாண்டி, சில வருடங்களாக ‘இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட்’ போட்டியில் ‘கோல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணியின் உரிமையாளர்களாக இருக்கிறார்கள்.
[ο] அட்லி - பிரியா
இயக்குநர் சங்கர், ரஜினிக்கு முன்பாக ஷாருக் கானை வைத்து, ‘எந்திரன்’ படத்தை இயக்க விரும்பினார்.
இதற்காக ஷாருக் கானை தொடர்புகொண்டு பேசியபோது, நானே தயாரிக்கிறேன், பட்ஜெட்டை அனுப்புங்கள் எனச் சொன்னார். உடனே, பட்ஜெட்டை அனுப்பினார் சங்கர்.
அந்த சமயம் ஏவிஎம் தயாரிப்பில் ரஜினியை வைத்து, ‘சிவாஜி’ படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் சங்கர். பட்ஜெட்டை மீறி நிறைய செலவு வைத்தார் சங்கர். பட்ஜெட் கட்டுக்கடங்காமல் போனது.
இந்த சமயத்தில்... ஷாருக் கானுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
அதில், சிவாஜிக்காக சங்கர் கொடுத்த வரவு, செலவு அறிக்கையை மீறி, கூடுதல் செலவு ஆகிக்கொண்டிருப்பதையும் அப்படியிருந்தும் இன்னும் படம் முடியாததையும் அந்தக் கடிதத்தில் யாரோ குறிப்பிட்டிருந்தனர்.
இதனால் ‘எந்திரன்’ படத்தை தயாரிக்கும் எண்ணத்தைக் கைவிட்டார் ஷாருக். (அதன் பிறகுதான் ரஜினி - சங்கர் - லைக்கா கூட்டணி ‘எந்திரன்’ எடுக்கப்பட்டது.)
ஷாருக் கானை வைத்து படம் பண்ணும் வாய்ப்பு சங்கருக்கு கிடைக்கவில்லை. ஆனால் சங்கரின் உதவியாளர் அட்லிக்கு கிடைத்தது.
இந்த வாய்ப்பு கிடைக்க காரணமானவர் அட்லியின் மனைவி பிரியா. அவர்தான் அட்லிக்கு திரைக்கதையில் பணியாற்றியதோடு, மிக துல்லியமாக பட்ஜெட்டையும் தயாரித்து, அட்லி மூலம் ஷாருக் கானுக்கு அனுப்பினார்.
ஷாருக்கின் சொந்த தயாரிப்பில் உருவான அந்தப் படம் ‘ஜவான்’. இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். கணவர் அட்லியின் வெற்றிக்குப் பின்னால் மனைவி பிரியா இருக்கிறார்.
[ο] சூர்யா - ஜோதிகா
குழந்தை வளர்ப்பு முதல் சொந்தப் படம் எடுப்பது வரை அனைத்திலும் மனைவி ஜோதிகாவின் கருத்தைக் கேட்டுச் செயல்படுவதாகக் கூறுகிறார் சூர்யா. இத்தம்பதியர் மும்பையில் குடியேறியதும்கூட ஜோதிகா ஆலோசனைப்படித்தான் நடந்ததாகக் கூறப்படுகிறது.
[ο] ஜெயம் ரவி - ஆர்த்தி
விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியர். இருவரும் சமரச தீர்வு நடுவத்தை அணுக வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
அந்த நடுவத்தில் அமர்ந்து பேசுவதற்குப் பதிலாக, பிரச்சினை தொடங்கியபோதே இருவரும் வீட்டில் அமர்ந்து பேசியிருந்தால் சிக்கலைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்.
இசையமைப்பாளர் ஒருவரது மனைவிக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு இருப்பதாக அண்மையில் திரையுலகில் பரபரப்பு நிலவியது. ஆனால், தன் கணவரின் ஒழுக்கம் குறித்து சிவாவின் மனைவி ஆர்த்தி சிறிதும் சந்தேகம் கொள்ளவில்லை. அதனால்தான் அவர்களின் உறவு பிரச்சினைகள் இன்றி நீடிக்கிறது என்பதையும் விவரம் அறிந்தோர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மூத்த நடிகர் ரஜினி - லதா தம்பதியர் தொடங்கி, சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி, விஜய் - சங்கீதா, பிரசன்னா - சினேகா என பல தம்பதியர் திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த ஜோடிகளில் மனைவியின் ஒத்துழைப்பால்தான் தொடர்ந்து முன்னேற்றங்கண்டு வளர்ந்து வருவதாக கணவன்மார்கள் கூறுகின்றனர். பல பேட்டிகளில் இதைக் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களுக்குள் இருக்கும் புரிதலே இதற்குக் காரணம்.
இதை உணரும்போது நீதிமன்றம், சமரச தீர்ப்பாயம் முதலியவை மனித உறவுகளில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
மனைவி சொல்... எப்போதுமே கணவனுக்கு வழிகாட்டும் மந்திரமே...!