கலாசாரத்தை இழிவுபடுத்த மாட்டேன்: கீர்த்தி சுரேஷ்

கலாசாரத்தை இழிவுபடுத்த மாட்டேன்: கீர்த்தி சுரேஷ்

1 of 2
படம்: சினி கிளாம்ஸ்
படம்: துபாக்கி

21 Nov 2026 - 5:11 pm

3 mins read

தாய்மாமனைத் திருமணம் செய்யும் தென்னிந்தியப் பாரம்பரியம் குறித்து எழுந்த விவாதங்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ், யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘அக்கா’ இணையத்தொடரில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அதன் விளம்பர நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் பேசிய ராதிகா ஆப்தே, கடந்த காலத்தில் தாம் நடித்த தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் வயதில் மூத்தவரான தாய்மாமனைத் திருமணம் செய்துகொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்தது தனக்கு மிகவும் சவாலாகவும் ஆணாதிக்கச் சூழலாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்த கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்குக் கலாசாரத்தில் மாமாவைத் திருமணம் செய்துகொள்வது சகஜமான ஒன்று என விளக்கமளித்தார்.

அவர் இவ்வாறு கூறியது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இந்நிலையில், மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷிடம் பழைய சர்ச்சை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அவரும் தயக்கமின்றிப் பதிலளித்தார்.

“ராதிகா அந்தக் கருத்தைச் சொன்னபோது, அவர் எதைப் பற்றிப் பேசுகிறார் என்பது எனக்கு முதலில் புரியவில்லை. ‘என் மாமாவுடன் காதல் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது’ என்று அவர் கூறிய பிறகே, அவர் நமது கலாசாரப் பின்னணியைப் பற்றிப் பேசுகிறார் என்பதை உணர்ந்தேன்,” என்றார் கீர்த்தி.

“தென்னிந்தியக் கலாசாரத்தைப் பற்றி அவருக்குப் போதிய புரிதல் இல்லை என்பதை அறிந்து, அது இங்குள்ள ஒரு பாரம்பரிய வழக்கம் என்பதை விளக்கவே முயற்சி செய்தேன்.

“கேரளாவில் அந்தக் கலாசாரம் கிடையாது என்பதால், தமிழ், தெலுங்குக் கலாசாரத்தைக் குறிப்பிட்டே அவ்வாறு பேசினேன். மிகுந்த மரியாதையுடன் சொல்கிறேன், நான் ஒருபோதும் நமது கலாசாரத்தைத் தாழ்த்திப் பேசமாட்டேன்,” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தந்தை, மகள் உறவு போன்றது

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘சத்யவான் சாவித்திரி’.

அப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது இயக்குநர் மிஷ்கின் கீர்த்தி சுரேஷைப் பாராட்டியபோது அவரைத் தொட்டுப்பேசினார்.

இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அந்தக் காணொளியில், கீர்த்தி சுரேஷின் முகபாவனைகளைக் கவனித்த இணையவாசிகளில் சிலர், அவர் அசௌகரியமாக உணர்ந்ததாகக் கூறி மிஷ்கினின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

அதேநேரம், இருவருக்கும் இடையே ஆழமான நட்புறவு இருப்பதாகக் கூறி மற்றொரு தரப்பினர் மிஷ்கினுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தனர்.

இந்நிலையில், இச்சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக ஊடகத்தில் பதிவர் ஒருவருக்குக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

“என் முகத்தில் எங்கே அசௌகரியம் தெரிகிறது? நாங்கள் இருவரும் தந்தை, மகள் போன்ற பிணைப்பைக் கொண்டுள்ளோம் என்று மிஷ்கினே மேடையில் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் கீர்த்தி.

“ஒருவேளை நான் அசௌகரியமாக இருந்தேன் என்றே வைத்துக்கொண்டாலும், திரைப்படங்களில் எங்களைத் தொட்டு நடிக்கிறார்கள் என்பதற்காகப் பொதுவெளியிலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா? “சகோதரரே, நீங்கள் சில விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்,” எனத் தனது நிலைப்பாட்டை கீர்த்தி தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

திரைக்கதையின் தேவைக்காக நடிப்பதற்கும் நிஜ வாழ்க்கையின் தனிப்பட்ட எல்லைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை கீர்த்தி சுரேஷ் துணிச்சலாக சுட்டிக்காட்டி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்