விஜயகாந்த் காலமான சோகத்தில் இருந்து இன்னும்கூட தமிழ்த் திரையுலகத்தினர் மீளவில்லை.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவரது உருவத்தை ஓரிரு காட்சியிலாவது திரையில் காண்பித்து, புதுப் படங்களை உருவாக்கி ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள்.
திரைப்பட நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்தபோது, பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட ஏராளமான படங்கள் வெளியாக உதவிக்கரம் நீட்டியவர் விஜயகாந்த்.
ஆனால், இன்று அவரது மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடித்துள்ள ‘படை தலைவன்’ படம் கடைசி நேரத்தில் சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே அறிவித்தபடி, ‘படை தலைவன்’ படம் இன்று (வெள்ளிக்கிழமை) திரைகாண வேண்டும். ஆனால், போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என சண்முக பாண்டியன் தரப்பில் கூறப்பட்டது.
மேலும், கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருப்பதாகவும் ஏறக்குறைய பத்து கோடி ரூபாய் பணம் இருந்தால்தான் படம் வெளியாகும் என்றும் ஒரு தரப்பு வியாழக்கிழமை இரவு வரை கூறிவந்தது.
இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்தோ, குறித்த தேதியில் படம் வெளியாக வேண்டும் எனக் கூறினாராம்.
ஆனால், நிலைமையைப் பார்க்கும்போது, அடுத்த வாரம்தான் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. எனினும், தமிழ்த் திரையுலகைச் சார்ந்த சில முக்கியப் பிரமுகர்கள் படத்தைச் சிக்கலின்றி வெளியீடு செய்வதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டதாகத் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், கடைசி வரை பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், சிக்கல்களைக் கடந்து படத்தை வெளியிட முடியாமல் போனது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலைமையா என்று அவரது அபிமானிகள் வருத்தத்தில் உள்ளனர்.
இத்தனை சிக்கல்களுக்கு இடையே படத்தின் நாயகன் சண்முக பாண்டியனோ, அமைதியாகக் காணப்படுவதுடன், ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதிலும் முனைப்பாக உள்ளார்.
“எல்லாரும் நான் அப்பா மாதிரி இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை, இந்தப் படத்திற்காக என்னால் முடிந்தவரை உழைத்துள்ளேன்,” என்கிறார் சண்முக பாண்டியன்.
அண்மையில் ‘படை தலைவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் அன்பு எழுதி, இயக்கியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த விழாவில் மனம்விட்டுப் பேசினார் சண்முக பாண்டியன்.
“இந்தப் படம் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமான படம். காரணம், அப்பா இருக்கும்போது இந்தப் படத்தின் கதையைக் கேட்டிருந்தார். இந்தப் படத்தில் இருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார். எனவே இந்தப் படம் எனக்கு மிக மிக நெருக்கமான படம்.
“இந்தப் படத்தை ‘கும்கி’ அல்லது வேறு எந்தப் படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இது முற்றிலும் வேறு மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளது,” என்றார் சண்முக பாண்டியன்.
இந்தப் படத்திற்காக மணியன் என்ற யானையுடன் பேசிப் பழக வேண்டியிருந்ததாம்.
இப்படத்தில் இவரது அறிமுகக் காட்சியிலேயே ஐந்து யானைகளுடன்தான் திரையில் தோன்றுகிறார். மேலும், படப்பிடிப்பின்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டாராம்.
இசை வெளியீட்டு விழாவின் போதே, படத்துக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார் சண்முக பாண்டியன். அது தற்போது உண்மையாகிவிட்டது என்கிறார்கள் கோடம்பாக்க விவரப்புள்ளிகள்.
இதற்கிடையே, விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் தாம் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அதில், சண்முக பாண்டியன்தான் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறினார்.
சண்முக பாண்டியனின் கண்களைப் பார்த்தால் விஜயகாந்தே அருகில் இருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டு தாம் சிலிர்த்துப்போவதாகக் கூறியுள்ளார் முருகதாஸ்.
அவரது இந்த அறிவிப்புதான் விஜயகாந்த் ரசிகர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது.