தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெற்றிக்காக கடைசிவரை ஓடிக்கொண்டே இருப்பேன்: ஸ்ரீகாந்த்

3 mins read
5e02762c-1aea-4ac3-b8dd-906af338429d
ஸ்ரீகாந்த். - படம்: ஊடகம்

கே.ரங்கராஜ் இயக்கத்தில் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஸ்ரீகாந்த். மார்ச் 14ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘ஏப்ரல் மாதத்தில்’, ‘மனசெல்லாம்’, ‘சதுரங்கம்’, ‘நண்பன்’ எனப் பல நல்ல படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். அண்மைக்காலமாக இவர் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடிக்கவில்லை.

‘ஆப்பிள் பெண்ணே நீ யாரோ...’ என்ற இவரது பாடல் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் முணுமுணுக்க வைத்தது.

இந்நிலையில், இயக்குநர் கே.ரங்கராஜ் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும் கொஞ்சம்கூட தயங்காமல் அதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார் ஸ்ரீகாந்த்.

‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ‘உயிரே உனக்காக’, ‘கீதாஞ்சலி’, ‘நினைவே ஒரு சங்கீதம்’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ரங்கராஜ்.

இந்நிலையில், ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தனது திரைத்துறைப் பயணம் குறித்தும் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை குறித்தும் மனம்திறந்து பேசியிருக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்.

“நான் திரையுலகத்திற்கு வந்து இருபத்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தப் பயணத்தில் என்னை வாழ்த்திய, விமர்சித்த, திட்டிய, ஆதரவு தந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

“அண்மையில் ஒரு பெரிய சம்பவம் நடந்தது. நான் பார்த்து வியந்த மிகப்பெரிய இயக்குநர் ஒருவரது படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. படப்பிடிப்பு நடத்திய இடத்துக்கான ஒருநாள் வாடகை மட்டும் 10 லட்சம் ரூபாய்.

“காலையில் 8 மணிக்கு படப்பிடிப்பு என்றனர். நான் காலை 7 மணிக்கெல்லாம் படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றுவிட்டேன். ஆனால், அந்த இயக்குநரோ மாலை 3.30 மணிக்குத்தான் வந்தார்.

“அதுபோன்ற இயக்குநர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் கே.ரங்கராஜ் வேறு மாதிரி. காலை ஏழு மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.30 மணிக்கெல்லாம் அரங்கில் தயாராக இருப்பார்.

“மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை பார்ப்பார். அவரைப் போல உழைப்பவர்களுக்கு எப்போதும் ஆதரவு தர வேண்டும்,” என்றார் ஸ்ரீகாந்த்.

தமக்கு சினிமா தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது என்று குறிப்பிட்ட அவர், கடைசி வரை சினிமாவில்தான் தனது பயணம் இருக்கும் என்றார்.

“பார்வையாளர்களும் நான் நல்ல படங்களில் நடித்தால் என்னைக் கைதூக்கிவிட தயாராக உள்ளனர். எனவே, நிச்சயம் நல்ல படங்களில் நடிப்பேன். திரையுலகில் கடுமையாக உழைப்பவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். எனவே, இதை மனதில் வைத்து இறுதிவரை ஓடிக்கொண்டேதான் இருப்பேன்.

“திரையுலகில் இப்போது பல விஷயங்கள் மாறிவிட்டன. இன்று நமக்கு ஏதாவது ஒன்று பிடிக்கவில்லை என்றால் அதை வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டும்.

“முன்பெல்லாம் சென்னையில் அதிகமான ஸ்டூடி[Ϟ]யோக்[Ϟ]கள் இருந்தன. எல்லாரும் சென்னைக்கு வந்து, தங்கியிருந்துதான் சினிமா குறித்து கற்றுக்கொள்வார்கள்.

“ஆனால், தற்போது ஹைதராபாத்தில்தான் அதிகமான சினிமா ஸ்டூடி[Ϟ]யோக்[Ϟ]கள் உள்ளன. அதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

“காரணம், நம்மிடம் ஒற்றுமை இல்லை. சினிமா சங்கங்கள் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து கிடக்கின்றன. இந்தப் போக்கு மாற வேண்டும். இரண்டு பிரிவுகள் தேவையில்லை. ஒற்றுமையுடன் இருந்து, மீண்டும் நம் தமிழ் சினிமாவை, சென்னையை உயர்த்த வேண்டும்,” என்றார் ஸ்ரீகாந்த்.

குறிப்புச் சொற்கள்