இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
“இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் சிரித்துக்கொண்டே திரையரங்குகளை விட்டு வெளியேற வேண்டும், படம் முடிந்த பிறகும் ரசிகர்கள் இந்தக் கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசவேண்டும் என்பதே என் மிகப் பெரிய ஆசை,” என்று இயக்குநர் ராஜா கருப்பசாமி கூறியுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் மூலம் ரிஷிகாந்த் கதைநாயகனாகத் திரையுலகில் அறிமுகமாகிறார். அனிஷ்மா அனில்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர்களுடன் சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் குறித்துத் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
“இந்தக் கதையை முதன்முதலாகக் கேட்டபோதே நாங்கள் சிரித்து ரசித்தோம். திரையில் இந்தக் கதையை ரசிகர்கள் பார்த்தால் எப்படி மகிழ்வார்கள் என்பதும் எங்களுக்குப் புரிந்தது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு திரைப்பட ரசிகராக நாம் விரும்பும் நகைச்சுவை, உணர்வுகள் அனைத்தும் இப்படத்தில் உண்டு,” என்றார்.
அத்துடன், “நம்மைச் சுற்றியிருக்கும் கதாபாத்திரங்கள், முழுமையான பொழுதுபோக்கு என அனைத்தும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் உண்டு,” எனக் கூறினார்.
இயக்குநர் ராஜா கருப்பசாமி அந்த உணர்வுகளை அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளதாகத் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பாராட்டினார்.

