தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயர் பதவிகளுக்கு பெண்கள் வர வேண்டும்: ஐஸ்வர்யா லட்சுமி

3 mins read
570f9712-7b45-4c70-bebc-83831e30a83b
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.  - படம்: ஊடகம்

முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளுக்குப் பெண்கள் வரவேண்டும் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அண்மையில் வெளியிட்ட அறிக்கை இந்தியத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இந்திய ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், “கேரள திரைத்துறையைச் சேர்ந்த ‘அம்மா’ அமைப்பு எனக்கு உதவியாக இருக்காது என்பதால் அதில் சேரவில்லை. பொறுப்பு மிக்கவர்கள் அந்த அமைப்புக்கு தலைமையேற்று நடத்தவேண்டும்.

ஏற்கெனவே செயல்பட்டு வந்த நிர்வாகிகள் பதவி விலகியுள்ளதால், தங்கள் மீதான குற்றச் சாட்டுகள் குறித்து பதில் சொல்லவேண்டிய இடத்திலிருந்து நழுவியுள்ளனர்.

இந்தச் சூழலில், முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளில் பெண்கள் தயங்காமல் அமர வேண்டும். பணியிடங்களில் பெண்கள் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும்,” என்று ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள், இயக்குநர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

ஒரு மருத்துவர் என்ற நிலையிலும் நடிகையாகும் ஆசை காரணமாக மருத்துவப் பயிற்சிகளை மேற்கொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டில் தமிழில் ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது.

இதனிடையே, தமிழ் சினிமாவிலும் பாலியல் தொந்தரவு இருப்பதாக மூத்த பிரபல நடிகை ஊர்வசியும் கூறியுள்ளார்.

இதுகுறித்து நடிகை ஊர்வசி கேரளாவில் உள்ள தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது, கேரள சினிமாவில்தான் இப்படி அதிகமாக நடக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. எல்லா மாநிலத்திலும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன.

கேரளாவில்தான் பெண்கள் துணிச்சலாக எதிர்கொள்ள முன்வந்தனர். இங்கே முற்போக்கான பெண்கள் அதிகம் உள்ளதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவிலும் இதே மாதிரியான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. ஆனால் அதை வெளிப்படையாக பேச யாரும் முன்வரவில்லை. அதனால் அங்கே எதுவுமே நடக்கவில்லை என சொல்ல முடியாது.

சினிமாவில் வேலை செய்யும் பெண்கள் நூற்றுக்கணக்கான நபர்களுடன் சேர்ந்துதான் வேலை செய்கிறோம். ஆனால் தனிப்பட்ட சந்திப்பின் போதுதான் இப்படியான சீண்டல்கள் நடக்கின்றன. அப்படியென்றால் பெண்கள் சந்திப்பை பொது இடத்தில் நடத்த வேண்டும்.

ஒரு தங்கும் விடுதி, உணவகம், காபிக் கடை போன்ற இடங்களில் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் வீட்டுக்கோ, அலுவலகத்திற்கோ வர முடியாது என சொல்ல வேண்டும். அதை ஒரு விதிமுறையாகவே சினிமா சார்ந்த சங்கங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு பெண்ணை பார்க்கும்போது ஒரு ஆணுக்கு விருப்பம் ஏற்படுகிறது. அவளது விருப்பத்தைக் கேட்பதில் தவறில்லை. உடனே அதையே பாலியல் சீண்டல் என சொல்லக்கூடாது. அந்த ஆண் அதையே ஒரு தொழிலாக வைத்து பலரை பின் தொடர்வது தவறானது. பெண் மீது தாக்குதல் நடத்துவது குற்றம் என்று ஊர்வசி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்