பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியிலான கசப்பான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும் என நடிகை பிரியாமணி அறிவுறுத்தி உள்ளார்.
மலையாளத் திரையுலகில் நிலவும் பாலியல் தொல்லைகள் குறித்துப் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் மலையாளத்திலும் தமிழிலும் பல ஆண்டுகளாக நடித்து வரும் பிரியாமணி இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.
மலையாளத் திரையுலகில் நடிகைகளுக்கான பாலியல் தொல்லைகளை விசாரித்து அறிக்கையும் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகங்களில் இதேபோல் விசாரணை நடத்தினால் நல்லது என்று பிரியாமணி கூறியிருப்பதற்கு ஒருசேர ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
“குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். திரைத்துறை மட்டுமன்றி எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுகின்றன.
“எனவே இத்தகைய கசப்பான அனுவபங்கள் குறித்து துணிச்சலாகப் பேசுவது விழிப்புணர்வை ஏற்படுத்தும்,” என்கிறார் பிரியாமணி.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சிலர் ஆதாரம் கேட்பதாக குறிப்பிட்டுள்ள அவர், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களுக்கு ஆதாரங்கள் தர முடியாது என்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“இப்போது கேமரா கைப்பேசிகள் வந்துள்ளன. பெண்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அப்படியே தொடர வேண்டும்,” என்று அறிவுறுத்தும் பிரியாமணி, அதிர்ஷ்டவசமாக தனக்கு இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் ஏதும் ஏற்படவில்லை என்கிறார்.
மேலும் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்ட யாரும் தம்மிடம் அது குறித்து ஏதும் பகிரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.