‘கருப்பு’ திரைப்படத்தை வெளியிடத் தொடரும் பணிகள்: ஆர்.ஜே. பாலாஜி

‘கருப்பு’ திரைப்படத்தை வெளியிடத் தொடரும் பணிகள்: ஆர்.ஜே. பாலாஜி

1 mins read
91bb736d-f570-4256-8933-8d09d9a6dffc
‘கருப்பு’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா. - படம்: திங் மியூசிக் இந்தியா
Google News Preferred Icon

திரையுலகப் பிரபலம் சூர்யாவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் குறித்த மேல் விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று அப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார்.

திரைப்படத்தைப் பற்றிய மேல் விவரங்கள் குறித்து பல ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் கேள்வி கேட்டுவரும் நிலையில் தமது பதிலைக் காணொளி வழியாகப் பாலாஜி பதிவிட்டார்.

“அடுத்த வாரம் இதே நேரம், ‘கருப்பு’ படத்தை வெளியிடுவதற்கான பணிகளைக் கவனித்துக்கொண்டிருப்போம். படத்தின் முன்னோட்டக் காட்சிகள் தயார். அனைவருக்கும் அது பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்று சொன்ன பாலாஜி, பல அரசியல் நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் கூறினார்.

“நாம் ஆசையாக வாக்களித்த ஒன்று நிறைவேறியிருக்கிறது என்ற மகிழ்ச்சியில் இருக்கும்போது பல எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன,” என்றார் அவர். அந்தத் திருப்பங்கள் எல்லாம் முடிந்த பிறகு நல்லதும் தாம் எதிர்பார்ப்பதும் விரைவில் நடைபெறும் என்று பாலாஜி குறிப்பிட்டார்.

“நல்லது நடக்கும் என்று அனைவரும் வேண்டிக்கொள்வோம். நல்லதே நடக்கட்டும். விரைவில் ஒரு தெளிவு பிறக்கட்டும். உங்களது விருப்பம்போல படத்தை வெளியிடத் திட்டமிடுகிறோம்,” என்ற பாலாஜி, விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கையோடு மக்களைச் சந்திக்கவிருப்பதாகக் கூறினார்.

அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியீடு காணும் என்று எதிர்பார்க்கப்படும் ‘கருப்பு’ திரைப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அந்தப் படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாள்களுக்கு முன்பு மதுரையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்