என்னதான் திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கி வெற்றி நடைபோட்டு வந்தாலும், பழைய பாசம் மறந்து போகுமா என்பதற்கு ஏற்ப தனியிசைப் பாடல்கள், இசைத்தொகுப்புகளை வெளியிடும் ஆர்வம் இன்னும் சாய் அபயங்கரிடம் நீடிக்கிறது.
தமது வழக்கமான இசை, நடனத்துடன் உருவான ‘பவழ மல்லி’ என்ற புதிய பாடலை வெளியிட்டிருக்கிறார் சாய்.
இதில் ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறாராம். சாய்க்கு ஜோடியாக கயாது லோஹர் நடித்திருக்கிறார்.
பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில், அடுத்தடுத்து தமது இசையில் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து பல விவரங்களைப் பகிர்ந்துகொண்டார் சாய்.
இவரது இசையில் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் ஏப்ரலில் வெளியாகிறது. தற்போது தனுஷின் ‘டி-55’ படத்துக்கான இசைப்பணிகள் நடந்து வருகின்றன.
நடிகர் அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்துக்கான பாடல்களுக்கு மெட்டமைக்கும் வேலையும் மற்றொரு பக்கம் நடந்து வருகிறது.
“அட்லீ அண்ணாவைப் பற்றி ச்சொல்லியே ஆகவேண்டும். என்னை அவர் முதலில் சந்தித்தபோது இந்தப் படம் ஒப்பந்தமாகவில்லை. நான் ஒரேயொரு பாட்டை போட்டுக்காட்டினேன். அதைக் கேட்ட அடுத்த நொடி, ‘என்னுடைய அடுத்த படத்தில் நீ இசையமைக்கிறாயா?’ என்று கேட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“எனக்குத் தலைசுற்றியது. அவர் என்மேல் வைத்த நம்பிக்கையால்தான் எனக்கு என்மீதான நம்பிக்கை இன்னும் அதிகமானது,” என்றார் சாய்.
செம்மையாக இசையமைப்பது மட்டும்தான் தற்போது தம்முடைய ஒரே வேலை என்றும் எதைச் செய்தாலும் 100% உழைப்போடு செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் தனது ஆசை என்றும் அவர் சொன்னார்.
“சமூக ஊடகங்களில் பலரும் பலவிதமாகத்தான் கருத்துகளை முன்வைப்பார்கள். நம்மை வெறுப்பவர்களைப் பக்குவமாகக் கையாள வேண்டும்.
“’காதல் கொண்டேன்’ படத்தில் ஒரு வசனம் வரும். ‘வெறி வேணும்டா வெறி... பயங்கரமாக வேலை செய்யணும்னு வெறி வேணும்’. அது என்னுடைய பெற்றோர்களால், குருவால் கிடைத்திருக்கிறது.
“நெருப்பில் காலை வைத்துவிட்டு எரிகிறது என்றால் அது எரியத்தான் செய்யும். ஆனால், அதையெல்லாம் தாண்டி மகிழ்ச்சியாக வேலையைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்றார் சாய்.

