மனநிறைவுடன் பணியாற்றுவதே பெருமை: ரோஷினி பிரகாஷ்

3 mins read
8416ace4-c8cb-4be6-833f-be671ab07adc
ரோஷினி பிரகாஷ். - படம்: peakpx.com
multi-img1 of 2

ரசிகர்கள் தம்மைப் பன்முக நடிகையாகப் பார்க்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் ரோஷினி பிரகாஷ்.

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள அழுத்தமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட வேடங்களில் மட்டுமே நடித்தால் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் உடன்பாடு இல்லை என்றும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.

இயக்குநர் பாலா இயக்கிய ‘வணங்கான்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையில் அறிமுகமானவர் ரோஷினி. கன்னடத் திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதியானவர்.

தமிழ், கன்னடம் ஆகிய இரண்டு இடங்களிலுமே உணவு, கலாசாரம், வாழ்வியல் ஆகிய அனைத்தும் ஒரே அலைவரிசையில்தான் இருக்கிறதாம்.

மேலும் தமிழ் படங்களைப்போல் கன்னடத்திலும் தற்போது கதை சார்ந்த தனித்துவமான படங்கள் உருவாகி வருவதாக கூறுகிறார்.

“படைப்பு ரீதியாக இரு மொழிகளிலுமே என்னால் ரசித்து நடிக்க முடிகிறது. இரு மொழிகளிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது நான் செய்த புண்ணியம்.

“பாலா படத்தில் நடித்த போதுதான் என் மீதான நம்பிக்கை அதிகரித்தது. என் திரை வாழ்க்கையின் தொடக்கத்தில் நேர்மறை எண்ணங்கள் குறைவாகவே இருந்தன. அப்போதுதான் பொறுமையாக இருக்கவும் தொடர்ந்து உழைக்கவும் தயாராக இருந்தால் நாம் விரும்பிய வேடங்கள் அமையும் என்றும் அவற்றில் சிறப்பாக நடிக்க முடியும் என்றும் தெரிந்து கொண்டேன். இந்த நேர்மறை எண்ணங்கள் ஏற்பட பாலாவும் ஒரு காரணம்,” என்று சொல்லும் ரோஷினி, அண்மையில் வெளியான ‘மார்க்’ படத்தின் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்துக்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. ரோஷினியின் நடிப்பு வித்தியாசமாக இருப்பதாக விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

“புதிதாக ஏதாவது முயற்சி செய்யும்போது அது ஆர்வத்தை மட்டும் அல்லாமல் நடிகையாக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் அளிக்கிறது. அந்த வகையில் ‘மார்க்’ படத்தில் நானும் பங்களிக்க வாய்ப்பு கிடைத்ததை அற்புதமான தருணம் என்பேன். எனது கதாபாத்திரத்தின் வழியே பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய வேடம் அமைந்தது.

“கன்னட நாயகன் சுதீப்புடன் இணைந்து நடித்ததும் நல்ல அனுபவம்,” என்கிறார் ரோஷினி.

திரைப்படங்களைப் போல் ஓடிடி தளங்களுக்கும் முக்கியத்துவம் கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறுபவர், ஓடிடி தளங்கள் வந்த பிறகு திரைத்துறையின் வெற்றி, தோல்வி குறித்த தனது பார்வை முற்றிலும் மாறிவிட்டதாகச் சொல்கிறார்.

“முன்பு நிறைய படங்களை ஏற்று பரபரப்பாக நடிப்பதுதான் பெருமை எனக் கருதினேன். இப்போது பரபரப்பாக இருப்பதைவிட மனநிறைவுடன் பணியாற்றுவதே பெருமை எனத் தோன்றுகிறது.

“சினிமாவில் ஆண்டுக்கு சில படங்களில் நடிக்கலாம். அது நமக்கு மனநிறைவு தரக்கூடும். அதே போல் ஓடிடி தொடரிலும் பணியாற்றுவது உற்சாகம் அளிக்கிறது. ஏனெனில் அந்த தளத்தில் பெண்களுக்கு வலுவான வேடங்கள் அமைகின்றன என்கிறார் ரோஷினி.

தாம் எப்போதுமே இயக்குநரின் நடிகையாக இருப்பதையே விரும்புவதாகவும் இந்த மனப்போக்குதான் தன்னுடைய வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும் அண்மைய ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் அடுத்து மூன்று படங்களில் நடிக்க கதை கேட்டு இருக்கிறாராம். ரசிகர்களின் மனத்தில் தங்கியிருக்கும் கதைகளாக அமையும் பட்சத்தில், தனது நடிப்பை மேலும் சில படங்களில் வெளிப்படுத்த ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்