இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்குமானது என விவரிக்கும் ‘அலங்கு’.
அறிமுக நாயகன் குணாநிதி நடிப்பில் உருவாகியுள்ளது ‘அலங்கு’ திரைப்படம்.
‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த எஸ்.பி.சக்திவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சங்கமித்ரா தயாரித்துள்ளார். இவர் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாசின் மகளாம்.
படத்தின் நாயகன் குணாநிதி, மற்றொரு தயாரிப்பாளர் சபரீஷ் ஆகிய இருவரும் பாமக நிறுவனர் ராமதாசின் மகள் வழிப் பேரன்கள்.
“தயாரிப்பாளர் சபரீஷ் ‘செல்ஃபி’ என்ற படத்தைத் தயாரித்து முடித்த பிறகு, தன் சகோதரருக்காக நல்ல கதையைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது நான் சொன்ன கதை பிடித்திருந்ததால் அதைத் தயாரிக்க முன்வந்தார்.
“என்னுடைய தயாரிப்பாளர்கள் வணிக நோக்கத்துடன் படத்தயாரிப்பில் ஈடுபடவில்லை. அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படியாக சமூக பார்வையுடன் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்,” என்கிறார் இயக்குநர் சக்திவேல்.
அலங்கு என்றால் நாய் என்று அர்த்தமாம். சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை. ராஜராஜ சோழனின் படையில் நாய்கள் இடம்பெற்றிருந்ததாகவும் இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதாகவும் சொல்லும் இயக்குநர், அக்குறிப்பிட்ட நாய்கள் இனம் அழிந்துவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“காலம் கடந்தும் இந்தப் படம் பேச வேண்டும் என்பதால் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறோம். இனி நாய்கள் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்றாலே அனைவருக்கும் அலங்கு என்பது தான் நினைவுக்கு வரும்.
“‘கோ’ என்றால் அரசன் என்று அர்த்தம். அதனால்தான் இயக்குநர் கே.வி.ஆனந்தன் அதைத் தலைப்பாக வைத்தார். ‘அலங்கு’ என்றால் ஓடுதல் என்றும் ஒரு பொருள் உள்ளது,” என்று விளக்கம் அளிக்கிறார் இயக்குநர்.
அண்மையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை இது. கேரளாவில் பல காரணங்களுக்காக நாய்கள் அழிக்கப்பட்டன. அதுதான் இந்தக் கதையை எழுதும் எண்ணத்தை ஏற்படுத்தியதாம்.
இயக்குநர் சக்திவேலின் சொந்த ஊர் கோவை. அங்கிருந்து கேரளாவுக்கு ஏராளமான பழங்குடி இளையர்கள் வேலைக்காகச் செல்வதுண்டு. நாய்கள் கொல்லப்படும் சம்பவங்களில் இந்த இளையர்களுக்கு எந்த வகையில் தொடர்பு உள்ளது என்கிற கோணத்தில் கதை நகருமாம்.
“மக்கள் குப்பைகளைச் சரியாக தரம்பிரித்துவிட்டால் போதும், நாய்கள் தேவையற்ற கழிவுகளைச் சாப்பிட வாய்ப்பில்லை. ஊசி, ரத்தம் கலந்த பஞ்சு என மருத்துவக் கழிவுகளுடன் இறைச்சிக் கழிவுகளையும் சேர்த்து குப்பையாகக் கொட்டுகிறார்கள். அதைச் சாப்பிடும்போது நாய்க்கு வெறி பிடிக்கிறது.
“நாய்களுக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் மனிதர்களிடம் இருந்துதான் உணவு செல்ல வேண்டும். இதையெல்லாம் கதையின் தேவைக்கு ஏற்ப அலசியுள்ளோம்.
“மொத்தத்தில், இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்குமானது என்பதுதான் படம் சொல்லும் செய்தி,” என்கிறார் இயக்குநர் சக்திவேல்.
நாயகன் குணாநிதி பட்டைய படிப்பு (டிப்ளோமா) படிக்கும் இளையராக நடித்துள்ளார். நாடகங்கள், குறும்படங்கள் என நடிகனாக தன்னைப் பட்டை தீட்டிக்கொண்டவர், தமது கதாபாத்திரத்தில் எந்தவிதக் குறையும் இல்லாமல் அருமையாக நடித்துள்ளதாக படக்குழுவினர் பாராட்டுகிறார்கள்.
மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள காளி வெங்கட்டும் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்.
சரி, படத்தின் நாயகி யார்?
“யாரும் கிடையாது. இந்தக்கதையை விவரிக்கும்போதே படத்தில் நாயகி என யாரும் கிடையாது என்பதை குறிப்பிட்ட பிறகே தெளிவாக கூறிவிட்டேன்.
“இதை ஏற்றுக்கொண்டால்தான் மேற்கொண்டு பேச முடியும் என நிபந்தனையும் விதித்தேன். தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து உடனடியாக ஒப்புதல் கிடைத்துவிட்டது.
“பெரும்பாலான காட்சிகளை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் படமாக்கியுள்ளோம். காட்டுக்குள் பயணம் சென்று வந்த அனுபவத்தை இந்தப் படத்தின் மூலம் பெறலாம்,” என்கிறார் இயக்குநர் சக்திவேல்.

