எங்கு திரும்பினாலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த பேச்சுதான் கேட்கிறது. திரைத்துறை மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?
இந்தியத் திரையுலகில் ‘ஏஐ’ தொழில்நுட்பம் ஏற்கெனவே சில திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும், உலக அளவில் முழுக்க முழுக்க அத்தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி, முழுப் படத்தை உருவாக்கி சாதித்துள்ளனர் கன்னடத் திரையுலகத்தினர்.
உலகின் முதல் ‘ஏஐ’ படத்துக்கு ‘லவ் யூ’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. பத்து லட்சம் ரூபாய் செலவில் மொத்தப் படத்தையும் எடுத்துவிட்டனர்.
‘லவ் யூ’ பட இயக்குநர் ஒரு கோவிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வருகிறார். அவரது பெயர் நரசிம்ம மூர்த்தி. ஏஐ பணிகளை நூதன் என்பவர் மேற்கொண்டுள்ளார்.
நடிப்பு, இசையமைப்பு, பாடல்கள், பின்னணி இசை, பின்னணிக் குரல் பதிவு என அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் கையாண்டுள்ளனர்.
நரசிம்ம மூர்த்தி, பெங்களூருவில் உள்ள பாகலகுண்டே ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக இருந்தபடி ஏற்கெனவே இரண்டு திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
இப்படத்தின் தொழில்நுட்பப் பணிகளுக்குப் பொறுப்பேற்றுள்ள நூதன், சட்டம் பயின்றவர். கடந்த சில ஆண்டுகளாக கன்னட சினிமாவில் துணை இயக்குநர், படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
95 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகி உள்ளதாம் ‘லவ் யூ’. படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“இந்தத் திரைப்படத்திற்காக ஆறு மாதங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். எங்களைத் தவிர நடிப்பு, இசையமைப்பு, பின்னணி என்று நூற்றுக்கணக்கானோரின் பணிகளைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் செய்துள்ளது.
“ஒரு தரமான திரைப்படத்தில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் உள்ளன.
“திரைப்படம் தயாரிக்கும்போது சில தொழில்நுட்பச் சவால்களும் ஏற்பட்டன. நாங்கள் ‘ஓல்டு மேன்’ என்று தேடினால், 10,000க்கும் மேற்பட்ட வயதானவர்களின் படங்கள் வந்து விழும். அதில் சிறந்த பத்து படங்களை ஏஐ தேர்ந்தெடுக்கும். அதில் எங்களுக்குத் தேவையான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
“தொடக்கத்தில் கதாபாத்திரங்களின் தொடர்ச்சியிலும் சவால்கள் இருந்தன. கதாபாத்திரங்கள் நடக்கும், ஓடும் வேகத்தையும் குறிப்பிட வேண்டியிருந்தது. ஆனால், அண்மையில் இத்தொழில்நுட்பம் மேலும் வலுவடைந்துள்ளதால், தேர்வுகள் எளிதாகிவிட்டன,” என்று நரசிம்ம மூர்த்தி தெரிவித்துள்ளார்.
“நானும் இயக்குநரும் என இரண்டு பேர் மட்டுமே இணைந்து உருவாக்கிய படம் இது. 20 முதல் 30 நவீனக் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளோம். படம் பார்த்த அனைவருமே வழக்கமான தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படத்தைவிட சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளனர். அதனால் இப்போதே மனநிறைவு ஏற்பட்டுவிட்டது.
“இது கன்னடத் திரையுலகில் ஒரு புரட்சியை உருவாக்கும். இப்படம் ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை,” என்று சொல்கிறார் நூதன்.
இந்தத் திரைப்படம் மே மாதத்தில் திரைகாண உள்ளது.