‘வித் லவ்’ படத்தில் நடித்த, பணியாற்றிய அனைவருக்குமே பாராட்டுகள் குவிகின்றன. இந்தப் படத்தில், களையான முகம், துடுக்கான வசனங்களில் கதாநாயகி அனஸ்வரா ராஜன் ஒருபக்கம் நம்மைக் கவர்ந்தார் என்றால், இன்னொரு பக்கம் அமைதியாக வசனமே இல்லாமல் கண்களால் உணர்வுகளைக் கடத்தி நம் மனங்களையும் கடத்துகிறார் அனிஷா கதாபாத்திரத்தில் கலக்கிய காவ்யா அனில்.
இவர் தனது எதிர்காலத்தை முன்னிட்டு வகுத்திருந்த திட்டங்களில் சினிமா, நடிப்பு என்பதற்கெல்லாம் இடமே இல்லையாம். ஆனால், இன்று திறமையான நடிகை என்ற பெயர் தாமாகச் சேர்ந்துவிட்டது என்றார்.
“விஷுவல் கம்யூனிகேஷன் கல்வி பயின்றேன். தயாரிப்புப் பணிகளில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்.
“சொந்த ஊர் பெங்களூரு. பிறந்தது, வளர்ந்தது, படிப்பு எல்லாமே அங்குதான். விளம்பரத் துறையில் தயாரிப்பு நிர்வாகியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.
“விளம்பரத் தயாரிப்புதான் என்னுடைய முக்கியமான வேலை. அப்பா அனில் குமார், ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். அம்மா சுதா சொந்தமாக குழந்தைகளுக்கான பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தை நடத்துகிறார். இது மிகவும் கவனம் தேவைப்படும் வேலை. என் அம்மாவும் மிகவும் பொறுமையானவர்தான்.
“ஒரு வேலைக்காக சென்னை வந்திருந்தேன். அப்போது என் தோழி ‘ஸ்வீட் காரம் காபி’ என்ற இணையத்தொடரில் வேலை செய்து கொண்டிருந்தார்.
“அதில் குறிப்பிட்ட ஒரு வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஒருவர் ஏதோ காரணத்தால் அவரால் வரமுடியவில்லையாம். நான் அங்கு இருந்ததால் என்னை நடிக்கச் சொல்லிவிட்டார் இயக்குநர். மற்ற சிலரும் ஊக்கமளித்தனர். அவர்களுக்கு மறுப்பு சொல்ல முடியாமல், வேறு வழியின்றி நடித்தேன். அதுதான் நடிப்புக்கான முதல் அடித்தளம்,” என்றார் காவ்யா.
இந்த ஒன்றுதான், இத்துடன் முடிந்துவிடும் என்றுதான் நினைத்தாராம். ஆனால், அது ஆசீர்வதிக்கப்பட்ட நொடியாக இருந்திருக்க வேண்டும். அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“எதையும் மறுக்க முடியாத சூழலில் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்று இப்போது ஒரு நடிகையாக அடையாளம் காணப்படுகிறேன்.
“அனிஷா கதாபாத்திரத்தைப் பொறுத்தவரை, இயக்குநர் சொன்னதை அப்படியே செய்தேன். என் நடிப்புத் திறமையை சோதிப்பதற்காக அளிக்கப்பட்ட முதல் காட்சியே அந்த ‘பிறந்த நாள் பரிசு’ கொடுக்கும் காட்சிதான்.
“உணவகத்தில் அமர்ந்து, அதிகம் பேசாமல், மொத்த உணர்வையும் கண்களிலேயே வெளிப்படுத்த வேண்டும். ஒரே தடவையில் நடித்துவிட்டேன்.
“அப்போதே அப்படத்தின் இயக்குநர் பிரபுவுக்கு எனது நடிப்பு மிகவும் பிடித்துப்போனது. எந்தத் தயக்கமும் இல்லாமல் முழுமையாக என்னை அனிஷா கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்துவிட்டார்,” என்றார் காவ்யா.

