கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான ‘டாக்சிக்’ திரைப்படம் இரண்டாம் நாள் வசூலில் 65 விழுக்காடு கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக பாக்ஸ் ஆபிசில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
முதல் நாளில் 150 கோடி ரூபாய் வசூலித்ததாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இரண்டாம் நாள் வசூல் வீழ்ச்சியடைந்துள்ளது.
இரண்டாம் நாளில் இந்தியாவில் 36.40 கோடி ரூபாயும் உலகளவில் 50 கோடி ரூபாயும் வசூலாகி மொத்த வசூல் 190 கோடி ரூபாயானது.
யாஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அதிகப்படியான வன்முறை, ‘ஏ’ சான்றிதழ் காரணமாகக் குடும்பப் பார்வையாளர்களின் வருகை இரண்டாம் நாளில் கணிசமாகக் குறைந்துவிட்டது.
‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெளியானதால் ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் திரைக்கதையின் பலவீனம், அதிகப்படியான சண்டைக் காட்சிகள் காரணமாகப் பார்வையாளர்களிடம் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.
சுமார் 500 முதல் 600 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படத்தின் வணிகம் 425 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. இத்திரைப்படம் வெற்றி பெற உலகளவில் 850 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்க வேண்டும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


