வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் நடித்த ‘விடுதலை 2’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் சிங்கம் போல் தனியாக வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.
அப்படத்தின் வசூல் வேட்டையைத் தடுக்க வரும் டிசம்பர் 27ஆம் தேதி பல படங்கள் வெளியாக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
அலங்கு
எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘அலங்கு’. மனிதனுக்கும் நாய்க்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தை அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரித்து உள்ளார்.
ஸ்மைல் மேன்
ஷியாம் பிரவீன் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஸ்மைல் மேன்’. விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார்.
ராஜா கிளி
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் தம்பி ராமையா நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ராஜாகிளி’. இப்படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கதை, வசனம், இசை ஆகியவற்றை தம்பி ராமையாதான் செய்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
திரு மாணிக்கம்
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘திரு மாணிக்கம்’. சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
கூரன்
நிதின் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘கூரன்’. இப்படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ரோபோ சங்கர் மகள் இந்திரஜா, இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிறு பட்ஜெட் படங்கள்
ரெபா மோனிகா ஜான் நடித்த ‘மழையில் நனைகிறேன்’ மற்றும் ‘இது உனக்கு தேவையா’, ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’, ‘பீமா சிற்றுண்டி’, கிச்சா சுதீப் நடித்த ‘மேக்ஸ்’ மற்றும் ‘வாகை’ ஆகிய சிறு பட்ஜெட் படங்களும் இந்த வாரம் திரையரங்கில் வெளியாக உள்ளன.