தமிழ்த் திரையுலகில் இப்போது யோகி பாபு காட்டில்தான் வாய்ப்பு மழை அதிகம் பொழிகிறது.
தமிழ், இந்தி என அசத்திக் கொண்டிருந்தவர், அடுத்து ஹாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த டெல் கணேசன் என்பவர் தயாரிக்கும் ‘டிராப் சிட்டி’ (Trap City) என்ற ஹாலிவுட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் யோகி பாபு.
கணேசனைப் பொறுத்தவரை, பல தடைகளைக் கடந்து இந்தியாவில் உள்ள திறமைசாலிகளை உலகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதே தமது முக்கியப் பணி என்கிறார்.
தனது கடும் உழைப்பால் ஹாலிவுட்டில் முக்கியமான ஆளுமையாக இவர் உருவெடுத்துள்ளதாக இவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டுக்கும் ஹாலிவுட்டுக்கும் இடையே கலாசாரப் பாலத்தை உருவாக்கும் முயற்சிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் கணேசன் எனப் பாராட்டுகிறார்கள்.
இதற்கு முன்பு நடிகர் நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் ஆகிய இருவரையும், தான் தயாரித்த படங்கள் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய டெல் கணேசனின் பார்வை, தற்போது யோகி பாபு மீது பதிந்துள்ளது.
“இப்படத்தில் யோகி பாபு, ஆங்கில ‘ராப்’ பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் போல் நடனமாடும் ஒரு தனித்துவமான காட்சி பெரும் வரவேற்பைப் பெறும்.
“தமிழ்த் திரையுலகத் திறமையாளர்களின் பெருமையைப் பரப்புவதற்கும் கலாசார ரீதியில் கதை சொல்லும் முயற்சிகளை வளர்த்தெடுப்பதற்கும் தனது முயற்சி பயன்படும்,” என்கிறார் டெல்.கணேசன்.
தொடர்புடைய செய்திகள்
‘டிராப் சிட்டி’ படத்தின் கதை, திரைக்கதைக்குப் பொறுப்பேற்றுள்ள இவர், அப்படத்தின் இயக்குநராகவும் மாறியுள்ளார்.
இப்படத்தில் பிராண்டன் ஜாக்சன், ஜென்கின்ஸ், யோகி பாபு, நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இசைத்துறையின் பின்னணியில் நல்லதொரு கருத்தைச் சொல்லும் படமாக இது உருவாகிறது. இளம் கலைஞர் ஒருவர் இசைத்துறையில் சாதிக்கத் துடிக்கிறார். அவர் இந்த முயற்சிக்காக பல்வேறு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்பதுதான் இப்படத்தின் கதைச்சுருக்கம்.
புதுப்படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத அளவுக்கு பரபரப்பான நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள்கூட இவரது கால்ஷீட் தேவை என்றால் முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில், ஹாலிவுட் படத்துக்காகத் தொடர்ந்து 50 நாள்கள் இவர் கால்ஷீட் ஒதுக்கியிருப்பதாகவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தப் படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.