மொழியை வைத்து திரையுலகைப் பிரிக்க இயலாது: பார்வதி நாயர்

3 mins read
3222651b-7f2b-42c1-bbcb-e07b011cdce0
பார்வதி நாயர். - படம்: கேரளா9.காம்

முதன்முறையாக ‘உன் பார்வையில்’ என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் பார்வதி நாயர்.

இது புது அனுபவமாக இருந்தது என்றும் தன் திரைப்பயணத்தில் இந்த வாய்ப்பு மிகப் பெரிய சவால் என்றும் குமுதம் ஊடகப் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டையர்களாகப் பிறக்கும் சகோதரிகளின் கதை இது. இருவருமே நூறு விழுக்காடு மாற்றுத்திறனாளிகள் எனக் கூற இயலாது. ஏனென்றால் மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது மட்டும் அவர்களுக்கு கண்பார்வையில் பிரச்சினை ஏற்படும்.

பவ்யா, திவ்யா ஆகிய அந்த சகோதரிகளில், பவ்யா கதாபாத்திரம்தான் சுவாரசியமானது என்று கூறியுள்ளார் பார்வதி நாயர்.

கதைப்படி திவ்யா சாந்தமானவர். பவ்யா தொழிலதிபர்.

திடீரென ஒரு நாள் திவ்யா மர்மமான முறையில் இறந்து போகிறார். அந்த மரணம் யாரால் நேர்ந்தது என்பதை பவ்யா கண்டுபிடிக்கிறார். இந்தச் சகோதரிகளின் கதாபாத்திரங்களில்தான் நடித்து அசத்தியுள்ளார் பார்வதி.

பார்வையற்றவராக நடிக்கும்போது சண்டைக்காட்சிகளில் மேசை, கதவு மீது முட்டி மோதி நடிக்க வேண்டியிருந்ததாம்.

“இயக்குநர் கபீர்லால் கலைஞர்களிடம் எப்படி வேலை வாங்க வேண்டுமென்ற நுணுக்கத்தை நன்கு அறிந்தவர். அதனால் அவர் எதிர்பார்த்த நடிப்பைக் குறைவின்றி வழங்க முடிந்தது. மலையாளத்தில் மோகன் லாலுடன் ‘நீராலி’ என்ற படத்தில் நடித்திருந்தேன். இந்தப் படத்தில் ‘சைக்கோ’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்தப் படத்துக்காக 10 நாள்கள் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. அதில் எனது நடிப்பு மிக இயல்பாக இருந்ததாகப் பலரும் பாராட்டினர். ஆனால் அத்தகைய பயிற்சியோ, ஒத்திகையோ இந்தப் படத்துக்கு தேவைப்படவில்லை,” என்று பார்வதி தெரிவித்துள்ளார்.

எனினும், ஹாலிவுட்டில் வெளியான ‘ஜூலியாஸ் ஐஸ்’ என்ற படத்தை மட்டும் பார்க்கச் சொன்னார்களாம். பார்வையற்றவராக அவ்வப்போது மங்கலான, பார்வை இழந்தவராக மாறிமாறி நடிப்பது அவ்வளவு எளிதல்ல என்று கூறியுள்ள பார்வதி, பவ்யா கதாபாத்திரம் கதைப்படி மன அழுத்தம் உள்ளவராகச் சித்திரிக்கப்பட்டது என்றும் அதுபோன்று நடிக்க சற்றே மெனக்கெட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“படப்பிடிப்பின்போது கணேஷ் வெங்கட்ராமன் மிக ஆதரவாக இருந்தார். படப்பிடிப்பு முடிந்த பிறகும், பவ்யா கதாபாத்திரத்தின் மன அழுத்தம் என்னிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அதனால் பாதிக்கப்பட்டிருந்தேன்,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ள பார்வதி, ஒரே மாதிரியான கதாபாத்திரங்களைத் தாம் வரவேற்பதே இல்லை என்கிறார்.

புதுப்புது வேடங்களை மட்டுமே தன் மனம் தேடுவதாகவும் கூறியுள்ளார்.

“நான் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு இந்தக் கதாபாத்திரம் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தி இருப்பதாக யாராவது சொன்னால் அடுத்த படத்திலேயே அந்தக் கருத்தை உடைக்க விரும்புகிறேன். என்னால் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதுவே எனது விருப்பம்,” என்று கூறியுள்ளார் பார்வதி.

இனி மொழியை வைத்து திரையுலகத்தைப் பிரித்துப் பார்க்க முடியாது என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர், தாய்மொழி என்பதால் மலையாளத்தில் நடிப்பது தனக்கு சுலபம் என்று சிலர் சொல்வதை ஏற்க இயலாது என்கிறார்.

“எல்லா மொழி, கதாபாத்திரங்களுக்காக ஏதோ ஒரு வகையில் நாம் மெனக்கெட வேண்டியுள்ளது. கன்னடத்திலும்கூட பல படங்களில் நடிக்கிறேன். தொடர்ந்து நல்ல வேடங்கள் அமைந்தால் எனது நடிப்பு மேலும் மெருகேறும் என உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார் பார்வதி.

குறிப்புச் சொற்கள்