ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மதராஸி’.
சிவாவுடன் இணைந்து ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் அப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்துக்குச் சிவா அளித்த நேர்காணலில், “1,000 கோடி ரூபாய் வசூலை இலக்காகக் கொண்டு மட்டும் ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியாது,” எனக் கூறியுள்ளார்.
மேலும், தான் முன்பே இதுகுறித்து பேசியதாகக் கூறிய அவர், “நாங்கள் ‘அமரன்’ திரைப்படத்தைத் தயாரிக்கும்போது, அது எவ்வளவு வசூல் செய்யும் என்பதைப் பற்றி நினைக்கவில்லை,” என்றார்.
“ஒரு படம் வசூல் ரீதியில் வெற்றி பெற அதன் கதையோ தரமோ மட்டும் போதாது. திரையரங்கில் விற்கப்படும் நுழைவுச்சீட்டின் விலையும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
“நான் நுழைவுச்சீட்டின் விலை அதிகரிப்பதை ஆதரிக்கவில்லை.
“ஆனால், பெங்களூரு அல்லது மும்பையில் உள்ள திரையரங்கு நுழைவுச்சீட்டு விலைகள்போல் இங்கே இருந்திருந்தால், ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.800 கோடி அல்லது ரூ.1,000 கோடியைக் கூட எளிதாகக் கடந்திருக்கும்.
“தமிழ்த் திரையுலகம் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம், பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியான் சில நாள்களுக்குள் ‘ஓடிடி’ யில் வெளியாகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால், மும்பையில் உள்ள திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளியாகிக் குறைந்தது எட்டு வாரங்கள்வரை திரையிடப்படுகிறது. அதன்பிறகுதான் ‘ஓடிடி’யில் வர வேண்டும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதிக்கின்றனர்,” எனச் சிவா தமிழ்த் திரையுலகிற்கும் இந்தித் திரைத்துறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கூறினார்.
“ஒருவரால் மட்டும் இதைச் செய்ய முடியாது. ஆனால், தமிழ்த் திரையுலகம் அந்த இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ரூ.1,000 கோடி வசூல் என்ற சாதனை நிகழும் என்றும் நம்புகிறேன்,” என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ‘மதராஸி’ படத்தைப் பார்த்துவிட்டு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தன்னை வாழ்த்தியதாகத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
மேலும் ரஜினிகாந்த் தெரிவித்த வார்த்தைகளையும் தமது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.