ஒரு படம் வெற்றி பெறவில்லை என்றாலும் நடிகைகளின் திரையுலகச் சந்தை மதிப்பு குறைந்துவிடுகிறது. அதனால்தான் எல்லா படங்களுமே வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
அந்த வகையில், நடிகைகள் ராஷ்மிகா மந்தனாவும் பூஜா ஹெக்டேவும் அடுத்தடுத்த வெற்றிகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ராஷ்மிகாவைப் பொறுத்தவரை, அவர் நடித்த ‘அனிமல்’ இந்திப் படம் வசூல் ரீதியில் பெரிய வெற்றியைப் பெற்றது. அதேபோல் தெலுங்கில் நடித்த ‘புஷ்பா-2’ படமும் வசூலில் அசத்தியது.
ஆனால், தமிழில் தாம் நாயகியாக நடித்த ‘வாரிசு’, ‘சுல்தான்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனப் புலம்புகிறார்.
(இத்தனைக்கும் ‘சுல்தான்’ இரண்டாம் பாகம் உருவாகிறது.)
எனவே, தமிழில் சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் ஒரு வெற்றிப் படத்தில் நடிக்க வேண்டுமென விரும்புகிறாராம். தற்போது அவர் தனுஷுடன் இணைந்து நடிக்கும் ‘குபேரா’ அந்த வெற்றியைத் தரும் என்பது ராஷ்மிகாவின் நம்பிக்கை.
“இந்தப் படத்தில் எனது கவர்ச்சிக்கு எந்தக் காட்சியிலும் இடமில்லை. முழுக்க முழுக்க கதைக்காகவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். தெலுங்கில் பல வெற்றிப் படங்களை உருவாக்கிய சேகர் கம்முலாவின் இயக்கம் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறேன்,” என்கிறார் ராஷ்மிகா.
இதே நிலையில்தான் பூஜா ஹெக்டேவும் உள்ளார். விஜய்யின் கடைசிப் படம் எனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தில் இவர்தான் நாயகி. இந்தி, தெலுங்கில் கோலோச்சும் இவருக்கு கோடம்பாக்கத்தில் மட்டும் இன்னும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
விஜய்யுடன் நடித்த ‘பீஸ்ட்’ வசூலில் சாதிக்கவில்லை என்கிறார்கள். சூர்யாவுடன் நடித்த ‘ரெட்ரோ’ படமும் பெரிதாகப் பேசப்படவில்லை. இதனால் தன்னை ராசியில்லாத நாயகி என்று ஓரங்கட்டிவிடுவார்களோ என்று கவலையில் உள்ளாராம். ஆனால், விஜய் ரசிகர்கள் பலர், “எங்கள் தளபதிக்கு பூஜாதான் பொருத்தமான ஜோடி,” என்று தொடர்ந்து பதிவிட்டு வர, அதுமட்டுமே அவருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது எனத் தகவல் வந்துள்ளது.