இந்தியக் கலாசாரத்தின் பெருமை அறியாத இளையர்கள்: ரஜினி வேதனை

2 mins read
1f9b26a3-94c2-4f2e-ad72-c8911fbd3ee3
நடிகர் ரஜினி காந்த். - படம்: எக்ஸ் தளம்

இந்திய இளையர்கள் பலர் அந்நாட்டின் கலாச்சாரம், பெருமைகள் குறித்து அறியாமல் மேற்கத்தியக் கலாசாரத்தைப் பின்பற்றி வருவதாக நடிகர் ரஜினிகாந்த் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்கத்திய நாட்டு மக்கள் அவர்களது கலாசாரத்தில் நிம்மதி, மகிழ்ச்சி இல்லை என்று எண்ணியதால் இந்தியா வருவதாகவும் ஆனால் இங்கிருப்பவர்களோ அதன் பெருமை தெரியாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், இளையர்களிடையே இந்தியக் கலாசாரத்தின் உன்னதம் குறித்து எடுத்துரைத்து, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்’ கூலி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

அப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக, நெல்சன் இயக்கத்தில், ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில், அப்படத்தின் ‘டீசர்’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

நெல்சனுக்குப் பிறகு ரஜினியை அடுத்து இயக்கபோவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பல இளம் இயக்குநர்களிடம் அவர் கதை கேட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, சமூக ஊடகங்களில் அவ்வப்போது தமது கருத்துகளைப் பதிவிட்டுவரும் அவர், தற்போது திரைக்குவரும் படங்களைப் பார்த்து, அவற்றில் இருக்கும் சிறப்பு அம்சங்களைப் பாராட்டியும் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்திய நாட்டின் பாதுகாப்பு குறித்தும் கடலோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் அண்மையில் அவர் காணொளி ஒன்று வெளியிட்டிருந்தார்.

தற்போது சென்னையில் நடைபெற்ற லதா ரஜினிகாந்த், ஸ்ரீ தயா ஃபவுண்டேஷன் இணைந்துள்ள, ‘பாரத சேவா’ என்ற புதிய முயற்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் அவர் பேசியுள்ளார்.

அதில், இந்தக் கைப்பேசி யுகத்தில் இந்திய இளையர்களும் வயதில் மூத்தோர் சிலரும் இந்தியக் கலாச்சாரத்தின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளாமலேயே இருப்பதாகவும் மேற்கத்திய நாட்டினரே இந்தியாவின் பெருமைகளை உணர்ந்து அந்நாட்டின் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நிம்மதி வேண்டி இந்தியா வரும் மேற்கத்திய நாட்டினர், அங்குவந்து தியானம், யோகா, இயற்கையான வாழ்க்கையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே, இந்தியக் கலாசாரத்தை இளையர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் லதா ரஜினிகாந்த் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் ஆண்டவன் அருளால் வெற்றியடைய வேண்டும் என்று தாம் இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் அவர் அந்த நிகச்சியில் பேசியுள்ளார்.

அந்தக் காணொளி தற்போது பரவலாகி வருகிறது.

குறிப்புச் சொற்கள்