தமிழ்த் திரைப்பட நடிகர் ஜீவாவையும் சிங்கப்பூர் ‘ராப்’ கலைஞர் யங் ராஜாவையும் ஒரே மேடையில் கண்டுகளிக்கும் வாய்ப்பை சிங்கப்பூர் ரசிகர்கள் பெற்றனர்.
ஜீவா, யங் ராஜாவுடனான மக்கள் சந்திப்பை ‘தர்ஸ்டி ஹார்ஸ் பார் அண்ட் பிஸ்ட்ரோ’வில் ‘விஆர் புரொடக்ஷன்ஸ்’ ஏற்பாடு செய்திருந்தது.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) இரவு இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் ‘ஹவுஸ் ஆஃப் சாஸ்’ எனும் உடை நிறுவனத்தின் தொழில்நுட்பம் கலந்த புத்தாக்க முயற்சியை நடிகர் ஜீவாவும் யங் ராஜாவும் தொடங்கிவைத்தனர்.
மக்களும் யங் ராஜாவும் வினாக்கள் எழுப்ப, அவற்றுக்கெல்லாம் அமைதியாக விடையளித்தார் நடிகர் ஜீவா.
‘பண்பாட்டுப் பாலமாக யங் ராஜா’
“என் மகன், உதயநிதியின் மகன் இருவரும் யங் ராஜாவின் பரம ரசிகர்கள். யங் ராஜா தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ராப் செய்வதால் அனைத்துலக அளவில், பண்பாட்டுப் பாலமாகத் திகழ்கிறார்,” என்றார் ஜீவா.
சமூக ஊடகங்களின் திறன்மிக்க அனைத்துலகக் கலைஞர்களை உயர்த்த ஜீவா தொடங்கிய ‘காதுகேளாத் தவளைகள்’ (Deaf Frogs) திட்டம் மூலம்தான் யங் ராஜாவுக்கும் ஜீவாவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது.
“நான் யங் ராஜாவை இன்ஸ்டகிராமில் தொடர்புகொண்டேன். எனக்கு அவரது படைப்புகள் மிகவும் பிடித்திருக்கின்றன என்றும் தமிழை அனைத்துலக அளவில் இன்னும் வளர்க்க ஒரு குழுவை அமைப்போம் என்றும் கூறினேன்.
“யங் ராஜாவைப் படத்தில் நடிக்க வைப்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். நல்ல கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
“பல அனைத்துலகக் கலைஞர்களுடன் திரைப்படங்களை எடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டிலிருந்து வந்தவர் சிங்கப்பூரரைத் திருமணம் செய்கிறார் போன்ற கதைகளுக்கான எழுத்தாளர்கள் எங்களுக்குத் தேவை,” என்றார் ஜீவா.
மிகைமெய் உடைகள் அறிமுகம்
இணையத்தில் உடைகள் வாங்கும் முறையை முற்றிலும் மாற்றும் தொழில்நுட்பம் இணைந்த சட்டையை அறிமுகப்படுத்தியது ‘ஹவுஸ் ஆஃப் சாஸ்’ நிறுவனம். தொழில்நுட்பப் பங்காளியாக ‘இமர்சிவ் ஐஓ’ நிறுவனம் கைகோத்துள்ளது.
சட்டையிலுள்ள ‘கியூஆர்’ குறியீட்டை வருடினால் சட்டையிலுள்ள கடல்நாகம் உயிர்பெறுவது போன்று இன்ஸ்டகிராமில் தெரியும்.
மனித பொம்மை (mannequin) அந்த உடையை அணிந்தால் எப்படி இருக்கும் என்பதையும் மிகைமெய் தொழில்நுட்பம்வழி (Augmented Reality) காண முடியும்.
உடை அறிமுகத்தைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சிப் புகழ் திவாகர், தங்கதுரை இருவரின் நகைச்சுவையால் அரங்கம் அதிர்ந்தது. 2015 வசந்தம் ஸ்டார் வெற்றியாளர் சுபாஷினி சுந்தரம் இசைமழையில் நனையவைத்தார்.
கனவு மெய்ப்பட்டது
“இது எனக்கு மிக முக்கியமான ஒரு தருணம். நான் நடிகர் ஜீவாவுடன் சிங்கப்பூரில் இதுபோன்று நிகழ்ச்சி நடத்துவேன் என நினைத்ததே இல்லை,” என்றார் யங் ராஜா.
மக்கள் சற்றும் எதிர்பார்த்திராத கலைஞர்களுடன் இணைந்து பாடல்களையும் தம் சொந்த இசைத் தொகுப்பையும் உருவாக்கிவருவதாக அவர் கூறினார்.
“யங் ராஜா, தன்னைப் பிறர் முக்கியமாக எண்ணுகிறார்களே எனக் கருதாமல், மிக எளிமையாக, அமைதியாக, ஆனால் உறுதியாக வளர்ந்துகொண்டிருக்கிறார் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்,” என்றனர் அவருடைய பெற்றோர் யூசுப், ஆயிஷா ரஜித்.
சிங்கப்பூர்க் கலைஞர்களை வெளிக்கொணர நாட்டம்
அனைத்துலகக் கலைஞர்கள் தம் திறன்களை வெளிப்படுத்த இணையத்தளம் ஒன்றை உருவாக்கி வருவதாகக் கூறிய ஜீவா, அதன்வழி சிங்கப்பூர்க் கலைஞர்களைத் தமிழ்த் திரையுலகம் கண்டறியும் என்றார்.
“இடி இடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. உங்களிடத்தில் வெளிச்சம் எழுந்து, நீங்கள் உங்கள் கலையை மேம்படுத்திக்கொண்டே வந்தால் யாராலும் உங்கள் வெற்றியைக் கட்டுப்படுத்த முடியாது,” என்ற அவரது சொற்கள் லட்சியத்தோடு அவரைக் காணவந்திருந்த சிங்கப்பூரர்களுக்கு தூண்டுகோலாக அமைந்தன.
“நடிகர் ஜீவாவின் ‘ராம்’ படம் தாய்-மகன் பாசத்தின் அடையாளம். அதைப் போலவே அவர் உண்மை வாழ்விலும் பாசமானவர் என இன்று உணர்ந்தேன்,” என்றார் வேல்.
“குறும்படங்கள் தயாரிக்கும் என் நண்பர்களுக்குப் பல அரிய தகவல்களை வழங்கினார் நடிகர் ஜீவா,” என்றார் ஷேக் தாவூத்.
“நடிகர் ஜீவா அனைவருடனும் சரளமாகப் பேசிப் பழகியதைக் கண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் ‘தர்ஸ்டி ஹார்ஸ்’ உரிமையாளர் இளங்கோ சுப்ரமணியம்.

