‘கிங் ஆஃப் பிஜிஎம்’ என இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 45வது பிறந்த நாளை ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடினார்.
தனது இசையால் பலரையும் கட்டிப்போடு வைத்திருக்கும் இவர், தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இசையின் மொழி புரிந்த பலருக்கும் தனிமையில் துணையாக இருந்தது இவருடைய இசையென்றால் அது மிகையாகாது.
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய யுவன் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை இந்தச் செய்தித் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். இசைஞானி இளையராஜாவின் மகன் என்பதால் மட்டும் யுவன் சங்கர் ராஜா தமிழ் திரையுலகில் கால் பதிக்கவில்லை. தனது திறமையால் வளர்ந்தவர். அதுமட்டுமன்றி, ரோஜா படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.
அன்றைக்கு உச்சத்தில் இருந்த இளையராஜாவை ரகுமானின் திறமை ஓர் உலுக்கு உலுக்கி விட்டது. இதனை, பதின்ம வயது இளைஞனாக இருந்த யுவன் சங்கர் ராஜாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இதனால் ஏ.ஆர்.ரகுமானை இசையில் விஞ்ச வேண்டும் என்ற எண்ணத்தில், இசையை நேசிக்க ஆரம்பித்தார். இசையமைப்பாளராக உருவெடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை யுவன் வளர்த்துக் கொண்டார்.
யுவன் சங்கர் ராஜாவின் கனவு ‘விமானி’ ஆக வேண்டும் என்பது தான். தன் தந்தையை விஞ்சியவரை மிஞ்ச வேண்டும் என்பதற்காகத் தனது கனவை விடுத்து, இசையமைப்பாளராக மாறினார் யுவன். தொடக்கத்தில் இவர் இசையமைத்த படங்கள் எதுவும் பெரியளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான, பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமில்லாமல், மாபெரும் வெற்றிப் பாடல்களாக அமைந்தது.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த பாடல் என அனைவரும் கூற, தனது தந்தைக்கு பெருமை சேர்த்தார். அதன் பின்னர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன. இளையராஜாவுக்குப் பின்னர் ஏ.ஆர். ரகுமானிடம் தயாரிப்பாளர்கள் எப்படி வரிசைக் கட்டி நின்றார்களோ, அதேபோல் யுவன் சங்கர் ராஜாவின் தேதிக்காகத் தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டு இருந்தனர்.
தான் வளரும் காலத்திலும் சரி, வளர்ந்த பின்னரும் சரி, படத்தின் பொருட்செலவைக் குறித்து எண்ணாமல் தனது மனத்திற்குக் கதை பிடித்தால் மட்டுமே அந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்துக் கொடுத்து வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 150 படங்களுக்கு இவர் இசை அமைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இவரும் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள் காலத்திற்கும் கொண்டாடப்படும்.
தனது வைராக்கியத்தால் வளர்ந்து காட்டியுள்ளார் யுவன். இவரது இசை வாழ்க்கையே பலருக்கு உத்வேகம் அளிக்கின்றது என்றால், அவரது இசை பலருக்கும் ஏதோ ஒரு வகையில் உத்வேகம் அளித்துக்கொண்டு உள்ளது.