‘வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்’ அண்மையில் வெளியிட்ட உயிரோவியத் திரைப்படமான ‘ஸூடோப்பியா 2’ அனைத்துலக அளவில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
மூன்று வாரமாகத் தொடர்ந்து சக்கை போடு போட்டுவரும் இப்படத்தின் வருவாய், ஒரு பில்லியன் அமெரிக்க டாலரைத் ($1.30 பில்லியன்) தாண்டியுள்ளது. மூன்றாவது வாரயிறுதியில் வட அமெரிக்காவில் வசூல் 26.3 மில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டது. அதனையடுத்து உலக அளவில் திரைப்படத்தின் வருவாய் 1.13 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.
இவ்வாண்டில் (2025) ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் வசூலித்த இரண்டாவது அமெரிக்கத் திரைப்படம் ஸூடோப்பியா. சீன மொழியின் உயிரோவியப் படமான ‘நீ ஷா 2’ (Ne Zha 2) இரண்டு பில்லியன் அமெரிக்க டாலருடன் வசூலில் முதலிடத்தில் உள்ளது.
முயல், காவல்துறை அதிகாரியாகவும் நரி, அதன் கூட்டாளியாகவும் பரபரப்பான விலங்கு நகரில் உலா வருகின்றன. நகைச்சுவையையும் சமூகக் கருத்துகளையும் உள்ளடக்கிய அந்தத் திரைப்படம் சீனாவிலும் வரவேற்பைப் பெற்றது.
இதன் முதல் பாகமான, ‘ஸூடோப்பியா’, 2016ல் வெளியீடு கண்டபோது, அந்நாட்டின் மிகப் பிரபலமான வெளிநாட்டு உயிரோவியத் திரைப்படமாகத் திகழ்ந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காலம், உலக அளவில் மக்கள் திரையரங்குகளில் குவியும் இரண்டாவது பிரபலமான காலம் என்பதால், வசூல், திரையரங்க வர்த்தகத்தில் ஈடுபடுவோர்க்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

