கொவிட்-19 கிருமிப்பரவலின் கட்டுபாடுகளுக்கிடையே பல கோயில்களில் இவ்வாண்டு சிவராத்திரி விழா சுமுகமாக நடந்தேறியது.
கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங், தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரன் ஆகியோர் கேலாங் ஈஸ்ட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் மார்ச் 11ஆம் தேதியன்று இரவு நேரம் தொடங்கிய விழாவில் கலந்துகொண்டனர். இது குறித்து அமைச்சர் எட்வின் தம் ஃபேஸ்புக் பக்கத்தில், "பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து, கட்டுப்பாடுடன் விரதம் இருந்து, வழிபட்டு, தியானம் செய்வர். இவ்வாறு வழிபடுவது, ஒருவருக்கு நிம்மதி அளிப்பதுடன் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தும் என்று நம்பப்படுகிறது," என்று பதிவிட்டார்.
சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே இணைய முன்பதிவுக்கான இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டன என்று ஸ்ரீ சிவன் கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் திரு வெங்கடேஷ் நாராயணசுவாமி கூறினார்.
"அரை மணி நேர அவகாசத்திற்குப் பக்தர்கள் பதிவு செய்தனர். அந்த அரை மணி நேரத்தில் 125 பக்தர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்த ஏற்பாட்டால் கூட்டத்தை நிர்வகிக்க முடிந்தது. அத்துடன் வயதானவர்கள் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சியை இணையம்வழி பார்க்கவும் ஊக்குவித்தோம்," என்றார் திரு வெங்கடேஷ்.
சிவராத்திரியின் நான்கு கால பூஜைகளில் இரண்டாவது காலத்தில் பால்குடம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மார்ச் 11ஆம் தேதியன்று இரவு 8.30 முதல் 11.45 மணி வரை பக்தர்கள் பால்குடம் வழங்க அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் பால்குடங்களில் இருந்த பாலை ஒரு தட்டில் ஊற்றிய பின், பாலை நேரடியாக மூலவரின் சன்னிதிக்கு அனுப்பும் ஓர் இயந்திர அமைப்பும் புதுமையாகப் பொருத்தப்பட்டது. அதுபோக பக்தர்கள் தங்கள் அர்ச்சனைகளைச் செலுத்த ஒரு தாளில் அவர்களின் பெயர், நட்சத்திரம் எழுதி வழங்க முடிந்தது என்று இவ்வாண்டின் புதிய ஏற்பாடுகளைப் பற்றி விவரித்தார் திரு வெங்கடேஷ்.
சிவராத்திரிக்குக் கோயிலில் நீண்ட நேரம் இருக்க முடியவில்லை என்ற ஏக்கம் பக்தர்களிடையே இருந்தது. இருப்பினும் கிருமித்தொற்று கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் முடிந்தவரை விழாவில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டது நம்பிக்கையளிக்கும் சூழல் என்றார் திரு வெங்கடேஷ்.
"சிவராத்திரிக்கு கோயிலுக்குள் அமர்ந்திருக்க முடியவில்லை என்றாலும் ஒரு வகை நிம்மதியும் அமைதியும் இருந்தது. இந்த மாற்றமும் நன்றாக இருந்தது.கொவிட்-19 சூழல் சீராகி மீண்டும் வழக்கம்போல் வழிபாடுகள் நடக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை," என்றார் பக்தர் குமரன் செல்வம், 41.

