சிங்கப்பூரின் முன்னோடிக் கலைஞர்களில் ஒருவரான மனுநீதிவதி முத்துசாமி வியாழக்கிழமை (டிசம்பர் 9) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 88.
சிங்கப்பூரின் முதல் இந்திய பெண் தாளவாத்தியக் கலைஞரான திருவாட்டி மனுநீதி, இசைக் கலைஞராக, இசையமைப்பாளராக, இசை ஆசிரியராக இசையின் பல்வேறு பரிமாணங்களிலும் மிளிர்ந்தவர்.
வாய்ப்பாட்டு, ஹார்மோனியம், தென்னிந்திய, வட இந்திய இசைவகைகளில் தேர்ந்தவரான இவர், இந்தியாவிலிருந்து வரும் கஸல் கலைஞர்களுக்கு ஹார்மோனியம் வாசித்துள்ளார்.
தமிழர் திருநாள், தேசியதின அணிவகுப்பு உள்ளிட்ட பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறப்புக்குரியவர்.
'ஜெமினி மியூசிக் பார்ட்டி'யின் முக்கிய பாடகர் இவர். தாள வாத்தியக் கலைஞரான இவரது பக்கபலத்துடன்தான் 'லேடிஸ் ஆர்க்கெட்ஸ்ரா' இசைக் குழுவை இவரது உறவினர் திருமதி ராஜா உருவாக்கினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள், நாட்டிய நாடகங்கள் பலவற்றுக்கும் இசையமைத்துள்ள திருவாட்டி மனுநீதிவதி, 1980களுக்கு பின்னர் கலைப் பயிற்சியில் அதிகளவு அக்கறை செலுத்தினார்.
லலிதா வைத்தியநாதன் வழிநடத்திய ராமகிருஷ்ண சங்கீத சபாவில் முக்கிய இசை உறுப்பினராகவும் பயிற்றுவிப்பாளராகவும் இருந்தார்.
ஹார்மோனியம், தப்லா, மிருதங்கம், வீணை, வயலின் உள்ளிட்ட பல வாத்தியங்களுடன் பரதநாட்டியம், மெல்லிசைப் பாடல்களும் சொல்லிக்கொடுத்தார்.
கிருபானந்த வாரியாரிடம் பக்திப் பாடல்கள் பயின்ற இவர், தேவாரப் பண்ணிசையும் பஜனைப் பாடல்களும் சொல்லிக்கொடுத்தார்.
"இந்தியக் கலைகள் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வசதியில்லா பல மாணவர்களுக்கு இலவசமாக அம்மா சொல்லிக் கொடுப்பார். கலைக்காகவே வாழ வேண்டும், கலையில் சிறக்க வேண்டும் என்று கூறும் அம்மாவைத் தேடி பல விருதுகள் கடைசி காலம் வந்தன, " என்று கூறினார் அவரது இளைய மகளான திருமதி விக்னேஸ்வரி வடிவழகன்.
திருவாட்டி மனுநீதிவதியின் கணவர் அமரர் முத்துசாமி புல்புல் தாரா, ஹார்மோனியக் கலைஞர்கள். மேடை நாடக நடிகர்.
இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த திருவாட்டி மனுநீதிவதியின் தந்தை அமுதர் தம்பையாப் பிள்ளை, சிங்கப்பூர் நாடகக் கலையின் ஒரு முன்னோடி.
முதல் உலகப் போருக்கு முன்னர், சிங்கப்பூர், மலேசியாவுக்கு தமிழ் நாடகக் கலைஞர்கள் வரவழைத்து தெருக்கூத்து, சபா நாடகங்களைப் போட்டவர்.
சிங்கப்பூரரான அவரது தாயார் ரங்கநாயகிதான் மனுநீதிவதியின் முதல் குரு.
கேலாங் பாரு புளோக் 89ல் உள்ள மவுண்ட் வெர்னன் சான்சுவரியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பொதுமக்கள் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தலாம்.
இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும்.

