விருதுபெற்ற நாடகக் கலைஞராக வலம் வரும் சிங்கப்பூரர் ரமேஷ் மெய்யப்பனின் நாடகங்கள், உரையாடல்கள் இல்லாதவை.
தமது விறுவிறுப்பான உடல், முக பாவனைகளாலும் புத்தாக்கம் மிக்க மேடை வடிவமைப்பு
களாலும் உலகளவில் பார்வை
யாளர்களை இவர் வியக்க வைத்துள்ளார்.
2008 முதல் ஸ்காட்லாந்தில் வசிக்கும் ரமேஷ், மனநலம், பாலியல் வன்கொடுமை, சமத்துவம் என சமூகத்துக்குக் குரல் கொடுக்க இந்தக் குரலில்லா நாடகங்களை மேடை ஏற்றி வருகிறார். பிறப்பிலிருந்தே இவருக்குச் செவித்திறன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சைகை மொழி வழி மற்றவர்களிடம் தமது கருத்துகளை வெளிப்படுத்துகிறார்.
தமிழ்நாட்டில் பிறந்த ரமேஷுக்கும் அவரது தங்கைக்கும் செவித்திறன் குறைபாடு இருப்பது இளம் வயதிலேயே தெரிய வந்தது. இருவருக்கும் உகந்த கல்வி கிடைக்கவேண்டி சிங்கப்பூரில் குடியேறியது ரமேஷின் குடும்பம். ஆனால், அக்காலகட்டத்தில் சிங்கப்பூரில் சைகை மொழி அறிந்திருந்த ஆசிரியர்கள் வெகு சிலரே. சிங்கப்பூர் செவித்திறன் குறைபாடு உள்ளோருக்கான பள்ளியில் சேர்
வதற்கு முன்னர் சாதாரண தொடக்கப்பள்ளியில்தான் இரு உடன்பிறப்புகளும் பயின்றனர்.
குறை இல்லாத மாணவர்
களைவிட எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன் கிட்டவில்லை என்பது ரமேஷைத் தொடர்ந்து உறுத்தியது. கல்வியில் மெல்ல மெல்ல ஆர்வம் இழந்த அவரை, நாடகக் கலை
அரவணைத்துக்கொண்டது.
முதன்முதலில் சிங்கப்பூரின் செவித்திறன் குறைபாடு உடையோரை ஏற்ற ஹை! தியேட்டர் நாடகக் குழுவில் இணைந்த ரமேஷுக்கு, வசனமில்லா நாடகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தனக்கேற்ற ஒரு தளத்தை அங்கு அவர் கண்டறிந்தார்.
நாடகங்களை நடித்தும் இயக்கியும் அனுபவம் பெற்றார்.
உடலைக் கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்துவது ரமேஷுக்கு இயல்பாக இருந்த ஒரு திறன். அதையே வாழ்க்கைத்
தொழிலாகக் கொள்ளவேண்டும் என்ற முனைப்பில் அவர் உழைத்தார். தேசிய கலைகள் மன்றத்தின் உபகாரச் சம்பளம் பெற்று லிவர்பூல் கல்விக்கழகத்தில் நாடகப் பட்டக்கல்வி பயில இங்கிலாந்து சென்ற அவரின் பயணம், தற்போது அங்கு இருபது ஆண்டு
களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது.
ரமேஷ் அதுவரை அறிந்திராத பரந்து, விரிந்த நாடக உலகம் அவரை இங்கிலாந்தில் வரவேற்றது. ஆனால் ஆங்காங்கே இனவாதத்தையும், மாற்றுத் திறனாளி என்ற பாகுபாட்டையும் எதிர்கொண்டார் ரமேஷ். அங்கு செவித்திறன் குறைபாடு உள்ளோருக்காக இயங்கும் நாடக நிறுவனங்கள் சில மட்டுமே. அச்சமயத்தில் அவருக்குத் தெரிந்தளவில், ஸ்காட்லாந்தில் அவர் மட்டுமே செவித்திறன் குறைபாடுடைய ஒரே தொழில்முறை நாடகக் கலைஞர்.
அதனால் அங்கு சாதாரண நாடக கலைஞர்களுடன் இணைந்து பணிபுரியவேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது.
இச்சவால்கள் ரமேஷின் இலட்சியங்களுக்கு உரமூற்றி வந்தன. கலைக்கல்விக்கு பேர்போன 'ராயல் கன்சர்வேட்டோயர் ஸ்காட்லாந்து' பள்ளியில் வழங்கப்படும் செவித்திறன் இல்லாதோருக்கான இளங்கலை படிப்பில் காட்சி நாடகப் பாடத்தொகுப்பை வடி
வமைத்துள்ளார் ரமேஷ். தற்போது அப்பாடத்தொகுதியை அங்கு கற்பித்தும் வருகிறார்.
தனது நாடகங்களை சிங்கப்பூருக்கு அவ்வப்போது கொண்டு வந்துள்ளார் ரமேஷ். தனது காலத்தைக் காட்டிலும் தற்போது அதிகளவிலான விழிப்புணர்வு இருப்பதை அவர் பாராட்டினார்.
"என்னுள் இத்தகைய வளம் பொதிந்திருப்பதை எனது குறைபாட்டினால் மட்டுமே அறிந்துகொண்டேன். இப்படி பிறந்ததில் மகிழ்ச்சியே அடைகிறேன்," என்று புன்னகையுடன் சைகை மொழியில் தெரிவித்தார் ரமேஷ்.


