நூற்றாண்டு கண்டவரின் நீங்காத நினைவுகள்

3 mins read
cda61bfa-d5fb-4dda-84eb-0f736a6d0af9
பல தலைமுறை குடும்ப உறுப்பினர்களுடன் அண்மையில் 100வது பிறந்தநாளைக் கொண்டாடினார் திருவாட்டி சாரதா. - படம்: பே. கார்த்திகேயன்

சிங்கப்பூரிலிருந்து பெங்களூருக்குச் சென்ற நவம்பர் மாதம் மேற்கொண்ட பயணம் மூத்தோர் இல்லத்தில் தங்கியிருந்த தமது தம்பியைச் சந்திக்க மட்டும்தான் என்று முதலில் நினைத்தார் திருவாட்டி சாரதா செல்லம்.

ஆனால் தம்பியைச் சந்தித்துவிட்டு குடும்பத்தினருடன் ஹோட்டலுக்குச் சென்ற திருவாட்டி சாரதாவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

இந்தியாவில் இருக்கும் தனது தம்பியைச் சந்தித்த திருவாட்டி சாரதா.
இந்தியாவில் இருக்கும் தனது தம்பியைச் சந்தித்த திருவாட்டி சாரதா. - படம்: உமா செல்லம்

ஹோட்டலுக்குள் நுழைந்தபோது ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று பல தலைமுறைகளைச் சேர்ந்த உற்றார், உறவினர்களின் குரல் எங்கும் எதிரொலிக்க திருவாட்டி சாரதா நெகிழ்ந்துபோனார்.

பல தலைமுறைகள் கொண்ட குடும்பத்தினர் ஒன்றுசேர்ந்து திருவாட்டி சாரதாவின் 100வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினர்.

இந்தியாவில் குடும்பத்தினருடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய திருவாட்டி சாரதா.
இந்தியாவில் குடும்பத்தினருடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய திருவாட்டி சாரதா. - படம்: உமா செல்லம்

திருவாட்டி சாரதாவின் 100வது பிறந்தநாளை அவர் பிறந்த கர்நாடகாவில் கொண்டாட அவருடைய மகளும் மருமகளும் இணைந்து ஏற்பாடு செய்தனர்.

இந்தியாவிலும், சிங்கப்பூரிலும் இருக்கும் உறவினர்களுடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், கத்தார், கனடா, ஜெர்மனி என பல நாடுகளிலிருந்தும் 50க்கும் மேற்பட்ட சொந்த பந்தங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். 

திருவாட்டி சாரதாவின் 100 ஆண்டு கால வாழ்க்கை அனுபவத்தில் பல நினைவுகள் கொட்டிக்கிடக்கின்றன.

கர்நாடகாவின் பிஜாப்பூரில் 1924ஆம் ஆண்டு பிறந்த திருவாட்டி சாரதா, இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பார்த்து வளர்ந்தவர்.

“இந்தியா சுதந்திரமடையும்போது, இந்திய ஒன்றியமாகவும் பாக்கிஸ்தான் ஆகவும் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. அப்போது ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். வன்முறை, கொலை, வெறுப்புணர்ச்சி மேலோங்கின. அதையெல்லாம் என்னால் மறக்க முடியாது,” என்று 1947ல் நடந்த இந்தியப் பிரிவினையை நினைவுகூர்ந்தார் திருவாட்டி சாரதா.

திருவாட்டி சாரதா 1993ல் சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தார். பணி காரணமாக மகன் ராஜு செல்லம் சிங்கப்பூருக்கு வர முடிவெடுத்ததை அடுத்து 69 வயதில் இங்கு வந்தார் அவர்.

சிங்கப்பூரில் வாழும் மிகச் சில நூற்றாண்டு கொண்டாடும் மக்களில் ஒருவரான திருவாட்டி சாரதாவுக்கு உடன்பிறந்தவர்கள் ஏழு பேர். அவரைவிட 12 ஆண்டுகள் இளையவரான அவரது தம்பிதான் தற்போது உயிருடன் இருக்கிறார். 

திருவாட்டி சாரதாவின் தாய்மொழி தமிழ். ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளிலும் சரளமாகப் பேசுகிறார்.

பணியில் அதிக கவனம் செலுத்தியதன் காரணமாக தாமதமாக திருமணம் செய்துகொண்டார் அவர்.

இளம் வயதிலேயே சுறுசுறுப்புடன் பல விளையாட்டுகளில் ஈடுபட்ட அவரின் துடிப்பான ஆளுமை சிங்கப்பூர் வந்த பிறகும் எள்ளளவும் குறையவில்லை.

“நீந்துவது, மிதிவண்டி ஓட்டுவது, கபடி விளையாடுவது என சிறுவயதில் நண்பர்களுடன் வீட்டின் அருகில் விளையாடுவேன். படிப்பு, விளையாட்டு என்று என் வாழ்க்கை ஓடியது,” என புன்முறுவலுடன் சொன்னார் திருவாட்டி சாரதா.

அன்றாடம் நடை பயிற்சி செய்வது, புக்கிட் மேராவில் உள்ள என்டியுசி ஹெல்த் அமைப்பின் துடிப்பாக மூப்படைதல் நிலையத்தில் (ஆக்டிவ் ஏஜிங் சென்டர்) நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று நூறு வயதிலும் சுறுசுறுப்பாக உள்ளார் திருவாட்டி சாரதா.

“நான் எதையும் அளவாகத்தான் சாப்பிடுவேன்,” என்றார் அவர்.

வீட்டிலும் பம்பரமாகச் சுழன்று பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். நூல் வாசிப்பது, இணையம் வழி புதிய திறன்களை வளர்த்துக்கொள்வது, ஓவியம் வரைவது, கொக்கிப் பின்னல் செய்வது, வலைப்பதிவு செய்வது போன்றவை திருவாட்டி சாரதாவின் பொழுதுபோக்குகள்.

இன்னும் சில மாதங்களில் பிறக்கவிருக்கும் தன் கொள்ளுப் பேரப்பிள்ளைக்காக, திருவாட்டி சாரதா இப்போதே காலுறைகள், தொப்பி ஆகியவற்றைப் பின்னி வைத்துள்ளார்.

பட்டப்படிப்புக்குப் பிறகு இந்தியாவில் ஆசிரியராக பணியாற்றி வந்த திருவாட்டி சாரதா, 58 வயதில் ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற அடுத்த ஆண்டே கணவர் காலமானார்.

திருவாட்டி சாரதாவுடன் சிங்கப்பூரில் அதிக நேரம் செலவிடுவது அவரது மருமகள் திருமதி உமா செல்லம், 62.

“உமா எனக்கு ஒரு முன்மாதிரி. எப்போதும் சிரித்துப் பேசுவது, வருத்தமாக இருந்தால் ஒருவருக்கொருவர் சோகத்தைப் பகிர்ந்துகொள்வது என நாங்கள் பின்னிப் பிணைந்துள்ளோம்,” என்றார் திருவாட்டி சாரதா.

“நான் வந்தபோது இருந்த சிங்கப்பூர், இப்போது பெரிதும் மாறிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சிதான் இதற்குக் காரணம்,” என்ற திருவாட்டி சாரதா, “எனக்கு சிங்கப்பூர்தான் வீடு. சிங்கப்பூரை விட்டு நான் எங்கு செல்லவும் முடிவெடுக்கவில்லை,” என்றார்.

100 ஆண்டு வாழ்க்கை அனுபவத்தை தாரக மந்திரமாக உருவாக்கி வைத்துள்ளார் திருவாட்டி சாரதா.

“யாரையும் வற்புறுத்தாதே, யாரையும் மதிப்பீடு செய்யாதே, குடும்பத்தினரை மறக்காதே” என்பதே ஆலோசனை கேட்கும் எல்லாருக்கும் திருவாட்டி சாரதா சொல்வது.

திருவாட்டி சாரதாவுடன் சிங்கப்பூரில் அதிக நேரம் செலவிடுவது அவரது மருமகள் திருமதி உமா செல்லம். (வலது)
திருவாட்டி சாரதாவுடன் சிங்கப்பூரில் அதிக நேரம் செலவிடுவது அவரது மருமகள் திருமதி உமா செல்லம். (வலது) - படம்: பே. கார்த்திகேயன்
தனது தாயாரும், பாட்டியும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து வளர்ந்த திருவாட்டி சாரதா அவ்வாறே திருமதி உமாவுடன் இருக்க விரும்பியதாக சொன்னார்.
தனது தாயாரும், பாட்டியும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து வளர்ந்த திருவாட்டி சாரதா அவ்வாறே திருமதி உமாவுடன் இருக்க விரும்பியதாக சொன்னார். - படம்: பே. கார்த்திகேயன்
குறிப்புச் சொற்கள்